மலையாள எழுத்தாளர் (ஈ.ம.யௌ திரைக்கதையாளர்) P F Mathewsன் நேர்காணல் மலையாள மனோரமாவிலிருந்து,
மலையாள மூலம் - லெட்சுமி விஜயன்.
ஞாபகங்களில் எப்போதும் பெய்துக்கொண்டிருக்கும் மழைகள் உண்டு ஒவ்வொரு மனிதனுக்கும். மனதில் நின்று பெய்துக்கொண்டேயிருக்கும் அந்த மழை. இதுவரை பார்த்திராத ஒரு மழையாக. இதுவரை இடிக்காத இடிமின்னலாக. அது மனதில் இன்றும் பெய்துக்கொண்டிருக்கும். அது போல தான் சில சினிமாக்களும்.லிஜோ ஜோஸ் பெல்லுச்சேரியுடைய ஈ.ம.யௌ'வும் அப்படியொரு தரத்தில் படைக்கப்பட்ட படம்.
படத்தின் வெற்றியில் உங்களுக்கு எவ்வளவு சந்தோஷம்?
சந்தோஷம் இல்லை. பெரிய நிம்மதி. நம் சிந்தனையிலிருந்து உருவாக்கப்பட்ட ஒரு படைப்பை, மற்றவர்களுக்கு அதுவும் பெரிய கூட்டத்திற்கு வழங்குகிறோம். அதை பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டு, அனுபவிக்கும்போது நானும் என் குழுவும் மகிழ்ச்சியைவிட முதலில் நிம்மதி தான் அடைந்தோம் . மகிழ்ச்சி அதற்கு பிறகு தான்வரும். இது சாதாரணமானதொரு கதையல்ல(சினிமாவில்) , மேலும் லிஜோ அதை படமாக்கியது பொதுமுறையாக (usual making) அல்லாமல் வேறு விதமாக இருந்தது. அது எல்லாவருக்கும் பிடிக்க வாய்ப்பில்லை. ஆனால் அதற்கு நேரெதிராக எல்லாருக்கும் பிடித்தது.
மேலும் படத்தை பற்றி நிறைய எழுதவும் உரையாடவும் செய்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலான அனுபவத்தை இந்த படம் தந்துள்ளது. என் மருமகள் படத்தை பார்த்துவிட்டு, என்னிடம் சொன்னாள், " அப்பா, எனக்கு மனிதர்கள இன்னும் கூடுதலா நேசிக்கணும்னு தோணுச்சு". அதுபோல தான். ஒவ்வொரு கதாபாத்திரமும், படத்தில் வரும் மழையும், படத்தின் இறுதிக்காட்சியும், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவத்தை தந்திருக்கிறது.
நான் பர்ஸ்ட் காப்பி பார்த்தபோது, முன்பு என் மனதில் தோன்றியதைவிட இருமடங்கு அழகாக லிஜோ அதை படமாக்கியிருந்தார். அது அவ்வளவு சந்தோஷமாகயிருந்தது.
சினிமாவும் இலக்கியமும் ?
இரண்டும் ஒன்றல்ல என்பது என் அபிப்ராயம். நான் முன்பு எழுதிய திரைக்கதைகளும் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படங்களில் அடையாத ஒரு சாடிஸ்பாக்ஷனை ஈ.ம.யௌ'வில் அடைந்தேன். சினிமா முற்றிலும் வேறுவிதமான ஒரு மீடியம். இலக்கியம் போல அல்ல. நான் ஒரு நாவலை எழுதும் பொழுது, நான் மட்டுமே அங்க முடிவுகள் எடுப்பவன். ஆனால் சினிமா பலதரப்பட்ட மீடியங்களால் உருவாக்கப்படுவது. அங்க இயக்குனர் தான் தலைவர். கெமரா மேன், நடிகர்கள், இசையமைப்பாளர்கள் என்று ஒரு பெரிய கூட்டத்தையே ஒருங்கினைத்து ஒரு திரைப்படம் உருவாக்கும்பொழுது, அங்க இலக்கியத்திற்கு முதன்மையானதொரு இடத்தை தரமுடியாது.அது போல ஒரு சினிமாவை எடுத்தால், அது மோசமாகிப்போகும் என்று தோன்றுகிறது. முழு திரைக்கதையும் இயக்குனரின் கைகளுக்கு சென்றபின் , அதிகம் அவர் தலையிடமாட்டார். இயக்குனருக்கு அவசியப்பட்டால், கம்பர்ட் சோனில் திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யலாம். அது தவறில்லை. ஈ.ம.யௌ சமயத்தில் பல விவாதங்களை கடந்துவந்தோம். லிஜோ சொல்வது எனக்கும், நான் சொல்வது லிஜோவுக்கு புரியவைத்துக்கொண்டோம். அந்த சமயங்களில் விவாதங்கள் (திரைக்கதையின் மாற்றம் குறித்து) ஒரு நதியை போல ரசனைமிக்கதாக கடந்துபோனது.
லிஜோவை பற்றி?
லிஜோவை அவர் இயக்குனராகும் முன்பே தெரியும். தூர்தர்ஷனுக்காக உருவாக்கப்பட்ட ஒரு டெலி ப்ளீமில் அவரின் தந்தை நடித்திருந்தார். * (அவர் தந்தை ஜோஸ் பெல்லிச்சேரி ஒரு மலையாள சினிமா நடிகர்.)
அப்போது இடையில் அவரை ஒரு நாள் பார்த்தேன். சிறுவன். ஆனால் என் முந்தைய படைப்புகள் குறித்து என்னிடம் விரிவாக பேசினார். அது என்னை ஆச்சர்யப்படுத்தியது. அன்று எங்களுக்குள் ஒரு நெருக்கம் ஏற்பட்டது .எத்தனை நீண்ட இடைவெளி வந்தாலும், முறிந்து போகவில்லை எங்கள் நட்பு. நமக்கு விருப்பப்பட்ட, விஷயங்கள் பற்றி எந்த பார்மால்டிகளும் இல்லாமல் பேசிக்கொள்ளும் ஆட்கள் உண்டு நமக்கு. அப்படியொரு ஆள் தான் லிஜோ எனக்கு.லிஜோ சினிமாவுக்கு வந்த போதே எனக்கு தெரியும், நாங்கள் ஒன்றாக ஒரு படம் செய்வோமென்று. "மாத்யூஸ் சேட்டா, நாம ஒரு படம் பண்ணுவோம்" என்று லிஜோ என்னிடம் கேட்டப்போது, எனக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. இது நடக்கும் என்று எனக்கு தெரியும். 'ஆமேன்' வெளியான சமயத்தில் பலரும் அதன் திரைகதையை எழுதியது நான் தான் என்று நினைத்தனர். நானும் லிஜோவும் முதலில் இணைந்தது, 'ஆண்ட்டி க்ருஸ்து (Anti - Christ) படத்தில் தான். ஆனால் அது நடக்கவில்லை. இதற்கிடையில் லிஜோ, டபிள் பாரல், அங்கமாலி படங்களை செய்தார்.
ஐந்து நாட்கள் படப்பிடிப்பு தான் மீதமிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. அது நடக்காமல் போனதற்கு பல காரணங்கள் உண்டு. 'ஆண்ட்டி கிருஸ்து' என்று பெயரிட்டதால் தான் படம் வெளியாகவில்லையா என்று சிலர் கேட்கவே செய்தனர். ஆண்ட்டி கிருஸ்து என்ற பெயரில் பல படங்கள் உலகில் வந்துள்ளது. ஆனால் இங்கே? (கேரளாவில்)
இடையில் நான் 1986ல் எழுதிய 'சாவுநிலம்' என்ற நாவலை லிஜோவுக்கு வாசிக்கத்தந்தேன்.
அந்த நாவலை வாசித்துவிட்டு, லிஜோ என்னிடம் ஈ.ம.யௌ'வின் கதையை சொன்னார். ஆனால் சாவுநிலமல்ல ஈ.ம. யௌ. அந்த நாவலின் நிழல் மட்டுமே, ஈ.ம.யௌ திரைக்கதையை எழுதும் பொழுது எங்களுடனிருந்தது. ஈசி, சபேத் போன்ற பெயர்கள் அந்த நாவலில் இருந்து எடுக்கப்பட்டது. லிஜோவுக்கு நாவல் ரொம்பவும் பிடித்துபோய்விட்டது. அந்த வாசிப்பின் (அந்த நாவல் வாசிப்பின்) தொடர்ச்சியாகத்தான் இந்த படம் வந்தது என்று நினைக்கிறேன்.
செல்லனம் போன்றதொரு கடற்புற கிராத்திற்கு கையில் வாத்துடன், பேருந்தில் வந்து ஒருவர் இறங்குகிறார். அன்று இரவே அவர் இறந்தும் விடுகிறார். அங்கிருந்து தொடங்கி, மரணத்தின் பின்னாலான நிகழ்வுகளை வைத்து ஒரு திரைக்கதையை எழுதமுடியுமா என்று லிஜோ என்னிடம் கேட்டார். அங்க தான் ஈ.ம.யௌ ஆரம்பித்தது.
நான் அதிகம் தாமதிக்காமல் திரைக்கதையை எழுதிமுடித்துவிட்டேன். லிஜோவுக்கு இது பிடிக்குமா இல்லை பிடிக்காதா என்று எனக்கு ஒரு சந்தேகமிருந்தது. பின் வாசித்துவிட்டு, சந்தோஷமாக பேசினார். கடற்கரையும், லத்தின் கத்தோலிக்கர்களின் வாழ்க்கையும் கடலும் காற்றும் மரணமும் எனக்கும் முன்பே தெரிந்திருந்ததால், அதற்கேற்றார் போல், என் சூழலை மாற்றிக்கொண்டு , அதில் பயணப்பட்டு, என்னால் எழுதமுடிந்தது .
தொற்றால் வந்த மரணம் தானே ஈ.ம.யௌவில்? ( டாக்டர் வந்து வாவச்சனின் சடலத்தை சோதித்துப்பார்த்துவிட்டு , போலீஸிடம் கூறுவார். மிகச்சரியான வசனம் நினைவில்லை)
அப்படி நாங்கள் வைத்துக்கொண்டோம். அது படத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரீதியில் அனுபவப்பட்டது.



