Thursday, September 24, 2020

துப்பறியும் தங்கச்சியின் அட்டகாசங்கள் – Enola holmes பட விமர்சனம்

 


’துப்பறியும் புலி’ ஷெர்லாக் ஹோம்ஸின் தங்கை செய்யும் சேட்டைகள் தான் நெட்ஃபிளிக்சின் எனோலா ஹோம்ஸ் திரைப்படம்.

நான்சி ஸ்பிரிங்கர் ’எனோலா ஹோம்ஸை’ கதை நாயகியாக கொண்டு எழுதிய ‘எனோலா ஹோம்ஸ் மிஸ்ட்ரீஸ்’ (எனோலா ஹோம்ஸ் மர்மங்கள்) என்ற துப்பறியும் நாவல் தொடரை தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. இதை ’ஜாக் தொர்னே’ எழுத, ’ஹாரி ப்ராட்பீர்’ இயக்கி இருக்கிறார்கள்.

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் புகழ் மில்லி ப்ரவுன் இதில் எனோலா ஹோம்ஸாக அட்டகாசம் செய்திருக்கிறார். சூப்பர் மேனாக நடித்து வரும் ஹென்றி கேவில், ஷெர்லாக் ஹோம்ஸின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

பதினாறு வயதான எனோலோ தன் தாயுடன், இங்கிலாந்தில் உள்ள ஒரு கிராமத்தில் பெரிய மாளிகையில் வாழ்ந்து வருகிறார். சிறுவயதிலேயே தந்தையை இழந்துவிட, அண்ணன்களான ஷெர்லாக்கும் மைக்ராஃப்ட்டும் லண்டனுக்கு போய் விட, பின் தாயின் அரவணைப்பிலேயே வளர்கிறார்.

மிகவும் சுட்டிப்பெண்ணாகவும், அதே நேரம் புத்திசாலியாகவும், பாதுகாப்பு கலைகள் அறிந்த பெண்ணாகவும், முற்போக்கு கருத்துகள் கொண்ட பெண்ணாகவும் எனோலாவை அவள் தாய் வளர்க்கிறாள். எனோலாவின் உலகமே அவள் தாய் தான் என்று ஆகிறது. ஒருநாள் காலை எழுந்து தாயை தேடும் போது, அவள் வீட்டில் எங்கும் இல்லை. அதோடு அவளின் ஒரு அத்தியாயம் முடிகிறது.

இதனை அடுத்து அவளின் அண்ணன்களான ஷெர்லாக்கும் மைக்ரோஃப்ட்டும் லண்டனிலிருந்து அவர்களது கிராமத்திற்கு வருகிறார்கள். அவர்களால் எனோலாவின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களையும், அவளுடைய தாயை கண்டுபிடித்தாளா என்ற கேள்விக்கான பதிலையும் தான் திரைப்படம் ஜாலியாக, கொஞ்சம் உணர்வுபூர்வமாகவும் சொல்லியிருக்கிறது.

முதல் பத்து நிமிடங்களுக்கு மட்டுமே வரும் தாயின் கதாபாத்திரத்தின் பாதிப்பு படம் முழுவதும் தெரிகிறது. தாய்க்கும் அவளுக்குமான உறவை, திரைக்கதையில் கிடைத்த இடங்களில் எல்லாம் அழகாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள உணர்வு புரிதலை, துப்பறியும் காட்சிகளின் வாயிலாக சொல்லியது, கதையோட்டத்தை மேலும் உயிர்ப்புள்ளதாக மாற்றியது.

பொதுவாக சிடுசிடுக்காரராகவே வரும் ஷெர்லாக் இதில் தன் தங்கையின் மீது அன்பும் கனிவும் கொண்டவராக வருகிறார். ஆனாலும் சில இடங்களில் அவரின் துப்பறியும் புத்தி துள்ளிக்குதித்து வெளியே வந்து விடுகிறது. குறைந்த காட்சிகளே வந்தாலும், வந்த இடங்களில் எல்லாம் தனித்துவமான ஒரு முத்திரையை குத்திவிடுகிறார். அதிலும், தங்கையோடு பழைய நினைவுகளை பற்றி பேசும் இடத்திலாகட்டும், அவளுக்கு தன் பாசத்தை புரிய வைக்கும் இடத்திலாகட்டும் ”யய்யா அண்ணாமலை எங்கய்யா இருந்த இத்தன நாளா?” என்று அண்ணாமலை பட மனோரமா ஆச்சி குரலில் சொல்ல வைக்கிறார்.

இன்னொரு அண்ணனாக வரும் மைக்ராஃப்ட் ‘மதில் மேல் பூனை மேலாக’ வந்து போகிறார். சிறுவயதில் இருந்து, தாயால் சுதந்திரமாக  கல்வி புகட்டப்பட்ட எலோனாவை, அடிமை முறைபோல நடத்தப்படும் பள்ளியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதில் தோற்றுப் போகிறார். அவளுக்கு ரயிலில் கிடைக்கும் தோழனான லூயிஸோடு, லண்டனில் செய்யும் துப்பறியும் நடவடிக்கைகள், குதுகலமாக போகிறது.

இருவருக்குமான நட்பும், தாயின் வார்த்தை விளையாட்டுகளும், அதை வைத்துக்கொண்டு துப்பறிவதும் என எனோலாவுடனான வாழ்க்கை ஒருபக்கம் சொல்லப்பட்டாலும், மறுபக்கம் இங்கிலாந்தில் நடக்கும் தேர்தல், அதையொட்டி அரச குடும்பங்களில் ஏற்படும் கொலைகள், எலோனாவின் தாய் பங்கு வகிக்கும் புரட்சிகர கருத்துகளை கொண்டுள்ள பெண்கள் அமைப்பு, அக்காலத்திய லண்டன் நகரமும் அதன் துறைமுகமும் ரயில்களும் என புற விஷயங்கள் வழியாகவும் திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்கள்.

இரண்டு மணி நேரம் எந்த அடிபுடியும், திக்கு திக்கும் இல்லாமல் ஒரு மிருதுவான துப்பறியும் படத்தை பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் எனோலா ஹோம்ஸ்.

Tuesday, September 22, 2020

’சிரிப்பு வருதுதுது… ஆனா வரல’- அமேசான் தமிழ் சிட்காம் சீரிஸ்

 

கவிதாலயா தயாரிப்பில், அமேசான் ப்ரைம் வெளியிட்டிருக்கும் காமெடி தொடர்  ‘டைம் என்ன பாஸு’. நரு நாராயணன், மஹாகெர்தியுடன் சூப்பர் சுபு எழுதி      இயக்கியிருக்கிறார். சுந்தர் சியின் பேய் பட குத்துப்பாட்டுகளில் வருவது போல, ‘காதல்’ பரத், ரோபா சங்கர், பிரியா பவானி சங்கர், அசோக் செல்வன், கருணாகரன்,‘அலெக்ஸின் ஒண்டர்லேண்ட்’ புகழ் அலெக்சாண்டர் பாபு என நட்சத்திர பட்டாளங்களுக்கு குறைச்சல் இல்லை. மேலும் பார்த்திபனும், மொட்டை ராஜேந்திரனும் அவர்கள் பங்கிற்கு வாய்ஸ் ’ஓவராகவே’ கொடுத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியின் முயற்சி பல இடங்களில் கை கூடி வந்திருக்கிறது. ஆனால் நமக்கு தான் சிரிக்க வாய் கூடி வரவில்லை.

சென்னையின் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருக்கும் ஐடி இளைஞனான பாலாவின் (பரத்) ரெஸ்ட்ரூமில் நடக்கும் அதிசயம் ஒன்றால், ரெஸ்ட்டே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் அவன் வாழ்க்கையில் ஏற்படும் சாதக, பாதக, ராசி பலன்கள் தான் கதை. பத்தாம் நூற்றாண்டில் இருந்து சோழ ஒற்றன் கிள்ளியாக ரோபோவும், 70களில் இருந்து பிஎச்டி படித்த கம்பராமாயண புகழ் சிவகுமாரின் ரசிகையாக பிரியாவும், 2070களில் இருந்து ஹிப் பாப் ஆதியின் தற்கொலைப் படையை சேர்ந்த பாகியாக கருணாகரனும், 1870களில் இருந்து வந்த ‘மதராஸபட்டிணம்’ எமியை ஞாபகப்படுத்தும் தானதோம்தனன ஹன்னாவும், வாட்ச் மேனாக வந்து நம் வாட்சிங்கை ’தொந்தரவு’ செய்யும் அலெக்சாண்டரும் சேர்ந்து செய்யும் (செய்ய நினைத்த) கலாட்டா தான் டைம் என்ன பாஸ்.

அடுக்குமாடி குடியிருப்பு அறை, ஐந்து நண்பர்கள், டிபன் ஷாப், பின்னால் ஒளிக்கும் புஹாஹா சிரிப்பு ட்ராக் எல்லாம், பிரபல அமெரிக்க சிட்-காம் தொடரான ‘ப்ரெண்ட்ஸை’ ஞாபகப்படுவதாக இருக்கிறது. 70’s கிட்ஸ் முதல் 2k கிட்ஸ் வரைக்குமான நாஸ்டாலஜி பொருட்களான ’என்றும் பதினாறு’ சிவகுமார், இளையராஜா-ரகுமான், 7ஜி ரெயின்போ காலனி, ஹிப்பாப் ஆதி என எல்லாம் சரிசமமாகவே தூவப்பட்டுள்ளது.

பத்து எப்பிசோடுகளும், பத்து விதமான டாஸ்க் போல எடுத்திருக்கிறார்கள். மொத்தமாக மூன்று மணிநேரத்திற்கு மேல் இருக்கும் சீரியசை ’எப்படியாவது ஓடிக்கடந்து விடுவது’ தான் நம்முடைய டாஸ்க்காக இருக்கிறது. ‘சிரிக்க தான் மாட்ற இதையாச்சும் பண்ணு’ என்று பார்வையாளரையும் தன் டாஸ்க்குக்குள் ’இழுத்து’ வந்தது தெற்காசிய ’அமேசான்’ காடுகள் வரலாற்றிலேயே இதுதான் முதன் முறை.

நாம் ரெஸ்ட் ரூம் சென்று வருவதற்கு, ஸ்விக்கி ஆர்டர் வாங்கி வைப்பதற்கு, மேகி செய்து சாப்பிடுவதற்கு, ஊரில் இருக்கும் அப்புத்தாவை கடைசியாக பார்த்து வருவதற்கு, கேர்ள் ப்ரெண்ட்டின் போனை எடுக்காமல் விட்டதால் ஏற்படும் ‘ச்ச்சிறிய’ சண்டையை தீர்த்துக்கொள்ளவதற்கென்று சில எப்பிசோடுகள் பிரத்தியோகமாக எடுக்கப்பட்டிருக்கிறது. எப்பிசோடுகளை Pause செய்யாமல், அப்படியே ஓடவிட்டு இந்த வேலைகளை செய்யலாம். அதனால் கதை தொடர்ச்சியில் எந்த பிரச்சனையும் நமக்கு வராது என்பது கூடுதல் சிறப்பு.

’அப்பாடி இப்ப தான்ப்பா கொஞ்சம் சூடு பிடிக்குது’ என்று எழுந்து உட்கார போனால், கண்ணகியும் கோவலனும் வேலை தேடி வேளச்சேரி வந்த காலத்திலேயே கடுமையான ஜிஎஸ்டி விதிக்கப்பட்டு, அசோகர் காலத்தில் உயிர் கொள்ளி ஜோக்குகள் என்று தடை செய்யப்பட்ட காமெடிகளை முகத்திலேயே எறிகிறார்கள். அதிலும் அலெக்சாண்டர் ‘ஒண்டர்லேண்டில்’ இருந்து நேராக கீழடிக்கு போய் அங்கிருந்து, சில கடி ஜோக்குகளை அகழ்வாய்ந்து சொல்கிறார். இது நாம் சங்க காலத்திற்கே சென்று வந்த அனுபவத்தை தருகிறது.

சின்ன சின்ன வசங்களிலும், ப்ராப்பர்டீஸ்களிலும் எழுத்தாளர்கள் நிறையவே உழைத்திருக்கிறார்கள். பிரியாவின் சிவகுமார் மோகம், பாகியின் உணர்ச்சிகளின் வளர்ச்சி (உனா,வனா புஹாஹாஹா), ஹன்னாவின் இசை மோகம் என ஒவ்வொரு கதாப்பாத்திரங்களுக்குமான குணாதிசியங்களுக்கும், அவர்களின் கதாப்பாத்திர வளர்ச்சிக்கும் தனியான கவனம் செலுத்தியிருக்கிறார்கள்.  அதுவே பல இடங்களில் நம்மை சிரிக்க வைக்க தவறினாலும், சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கிறது.

பெரிய அளவில் ட்ராமா ஒர்கவுட் ஆகாமல் போனது, சின்ன சின்ன வசனங்களில் காட்டிய கவனத்தை முழு காட்சிகளிலும் காட்டாமல் விட்டது, தேவையில்லாத இடங்களில் வரும் laughing track என சொதப்பல்களுக்கான காரணங்கள் நிறையவே இருக்கிறது. ஆனால் இந்த எழுத்தாளர் டீமால், இதை விட சிறப்பான ஒரு காமெடி சீரியஸை கொடுக்க முடியும் என்பது நிச்சயம். இதை பார்க்க நினைப்பவர்களுக்கு பத்து எப்பிஸோடையும்  பார்த்து முடிப்பது தான் உங்கள் லட்சியம்.

Wednesday, September 16, 2020

சிங்கப்பெண்ணே சினிமா செய்வது எப்படி?

 


தேவையான பொருட்கள் :

1. ஒரு ஏழை பெண் பணக்கார ஆண்களால் வல்லுறவுக்கு செய்யப்படுவது. அதற்கு நீதி கேட்டு போராட வேண்டும். ஆனால் எக்காரணம் கொண்டும் அவளே நீதியை பெற்று விடக்கூடாது. ஒரு மாஸ் ஹீரோ ப்ரீ இண்டர்வலிலோ குறைந்தபட்சம் இண்டர்வலிலேயோ வந்து அவளுக்கு உதவதாக கதைக்களத்தை அமைக்க வேண்டும்.

இண்டர்வல் முதல் க்ளைமேக்ஸ் வரை அந்த பெண் அழுது கொண்டேதான் இருக்க வேண்டும். க்ளிசரின் மூன்று, நான்கு பாக்கெட் வாங்கி வைத்துக்கொள்வது நல்லது. அதேநேரம் அந்த ஹீரோவை பார்க்கும்போது மட்டும் தான் அவளுக்கு கண்ணீர் எவாப்ரேட் ஆகி தைரியமே வர வேண்டும்.

2. ‘தன்’ லட்சிய கனவிற்காக போராடும் பெண். அதாவது ‘தன்’ அப்பாவின் கனவையோ (அதற்கு 80-களில் ஹீரோவாகவோ வில்லனாகவோ நடித்த நடிகர்களை தேர்வு செய்யவேண்டும்) அல்லது ‘தன்’ கணவனின் கனவையோ (90களின் இறுதியில் ஹீரோவாக அறிமுகமாகி, நாலரை படங்களில் நடித்தவர். ஹார்பிக் விளம்பரம், பிக் பாஸ் நிகழ்ச்சிகளுக்கு போனவர்களை தவிர்த்து) நிறைவேற்றும் பெண்ணாக இருக்க வேண்டும்.

a. திருமணமாகாத பெண்ணாக இருந்தால், கண்டிப்பாக அப்பாவின் கனவை நிறைவேற்ற வேண்டும். எ.க. விளையாட்டாக இருந்தால், செஸ், கேரம், பப்ஜி, லூடோ, பாண்டி, ஆடுபுலி போன்ற இண்டோர் விளையாட்டுக்களை தவிர்த்து, கிரிக்கெட், புட்பால், பாக்சிங் போன்ற டிவியில் டி.ஆர்.பி அதிகம் உள்ள விளையாட்டுக்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.

1. பெண்ணை நடுராத்திரி 4 மணிக்கு எழுப்பி, ரன்னிங், ஜாக்கிங், ஜிம்மு, க்ரூப்ல டூப்பு, சிரிச்சா போச்சு, நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி போன்ற எல்லா எக்ஸஸைசுகளையும் செய்யவிட்டு, ஒரு மணி நேரத்துக்கு தேவையான புட்டேஜ் எடுக்க வேண்டும்.

2. அந்த புட்டேஜ்களை ஓடவிட்டு, டைனோசர் டாட்டரே, வாடி வெள்ளத்தாயி வெளிய என்று பெண்களுக்கு இரத்தக்கொதிப்பை ஏற்ற வைக்கும் பாடல்களை பின்னால் ஓடவிடவேண்டும். ஆச்சி மசாலாவில் வரும் எல்லா ரெடி மேட் பொடியையும் (இதில் 30 ரூபாய் குழம்பு மிளகாய் தூள் காம்போ ஆபர் சிறந்தது. கூடுதல் தகவல்களுக்கு விஜய் சேதுபதியை அணுகவும்) கலந்து தூவி விட்டு, பார்க்கிற பெண்கள் முதல் அவர்களின் பூனைக்குட்டி வரைக்கும், மூக்கு வழியாக நெடியேத்தி அடி குடல் வரைக்கு உணர்ச்சியை ஆழமாக இறக்க வேண்டும். பாடல் ஹிட் அடித்தால், வாட்சப்பிலிருந்து வாரணாசி வரைக்கும் உங்கள் பாட்டுதான் ரயிலாக ஓடும்.

3. பெண் எந்நேரமும் டவுசர், ஷூ மட்டுந்தான் அணிய வேண்டும். காலையில் ஷூட்டிங் வரும் போது வீட்டிலிருந்தே அணிந்து வர சொல்லவும். முடிந்தால் கோந்து போட்டு ஒட்டி விடவும்.

4. வேலையில்லா இஞ்சினியரிங் இளைஞன் ஊரில் இருப்பான். அவனை கூட்டிவந்து, பெண்ணை துரத்தி துரத்தி காதல் செய்ய வைத்து டார்சர் கொடுக்க வேண்டும்.

5. இண்டர்வெலுக்கு முன்னால் அந்த இளைஞன் பெண் கேட்க வர வேண்டும். இல்லையென்றால் பெண்ணின் அப்பாவிற்கு காதல் விஷயம் தெரியவர வேண்டும். ”லட்சியத்தோட வாழ்ற பொண்ணுக்கு காதல் ஒரு பெரிய தடை” என்று அப்பா அந்த பெண்ணுக்கு புரிய வைக்க வேண்டும்.

அடுத்த வேலையாக, அந்த பெண்ணை திருப்புவனத்திலிருக்கும் தாய்மாமன் திருப்பதிசாமிக்கோ, இல்லை மாங்காட்டிலிருக்கும் முறைப்பையன் மாணிக்கத்துக்கோ கட்டி வைக்க வேண்டும். ஏனென்றால், லட்சியத்திற்கு காதல் தான் தடையே தவிர கல்யாணம் (பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட) தடையே அல்ல.

6. பைனல் மேட்ச் நடக்கும் முந்தினநாள் மாலை தேநீர் இடைவெளியில், தினமும் 31 1/2 மணி நேரம் உடற்பயிற்சி செய்து வந்த (மீத நேரங்களில் காதல் செய்வதால் இந்த ஷாட்டேஜ்) பெண்ணை, வில்லனின் அடியாட்கள், ப்ரீ-கேஜி குழந்தைகளை ரிக்ஷா மாமாக்கள் ஸ்கூல் சவாரிக்கு தூக்கி வைத்துக்கொண்டு போவது போல அலேக்காக கடத்தி செல்ல வேண்டும்.

7. அப்பெண்ணின் பின்னால் சுற்றிய அந்த வேலையில்லா இஞ்சினியரிங் இளைஞன் இந்த கேப்பில் காதல் தோல்வி, வேலை இல்லாதது, சின்னம்மா மகள் கல்யாணத்திற்கு லால்குடி போகக் கூட காசு இல்லாதது என்று பல டிப்ரஷனிலிருக்கும் இளைஞன், அதிலிருந்து வெளியே வர லடாக் வரை ரோட் ட்ரிப் போகிறான். ஹிமாலயன், அவெஞ்சர் குறைந்தபட்சம் ராயல் என்பீல்ட் புல்லட் 350cc பைக்கை கொடுத்து அனுப்ப வேண்டும்.

இப்போது கடத்தல் சம்பவத்திற்கு வருவோம். கடத்தலை அறிந்த அந்த இளைஞன், ராபிடோவை பிடித்தாவது ஸ்பாட்டுக்கு வந்துவிடுவார். அப்படி வரும் போதும் தேனாம்பேட்டை சிக்னலில் மாட்டிக்கொண்டால், ஓடி வந்தாவது (புட்டேஜ் எடுத்து வைக்கலாம். Sneakpeek-ல் போட்டுக்கலாம்) எதிரிகளை துவம்சம் பண்ணி, அவளையும் அதைவிட முக்கியமாக அவளின் கற்பையும் காப்பாற்ற வேண்டும்.

பின் ஆட்டோமெட்டிக்காக அந்த பொண்ணுக்கு அவன் மேல் காதல் வரும். அதற்கு முன்பாக தினமும் 80 கிலோவை தூக்கி, ஒர்க் அவுட் செய்த பெண், அன்றைக்கு மட்டும், தன் கையை கட்டிப் போட்டிருந்த பத்தாம் நம்பர் நூலை அறுக்க முடியாமல் சிரமப்பட வேண்டும்.

8. அடுத்த காட்சி அந்த பெண் பைனலில் விளையாடி வெற்றி பெறுகிறார். மேடையில் அவள் ”ஒரு பொண்ணோட வெற்றிக்கு பின்னாடி ஒரு ஆண் இருப்பாங்க” என்று சொல்லும் போது, அவளின் அப்பாவையும் அந்த வேலையில்லா இஞ்சினியரிங் இளைஞனையும் க்ளோஸ் அப்-ல் காட்ட வேண்டும்.

b. திருமணமான பெண்ணாக இருந்தால், கணவனுக்கு பெருமை சேர்க்க பாடுபடும் அதேநேரம், குழந்தை பராமரிப்பு, தாய்மையின் மகத்துவம், மகப்பேறின் மண்வாசனை போன்றவற்றின் பெருமைகளை ஆங்காங்கே மழைச்சாரல் மாதிரி தூவும் பெண்ணாக இருக்க வேண்டும்.

1.வேண்டாவெறுப்பாக கல்யாணம் செய்து வைக்கப்பட்டால், அந்த கணவன் அமைதியாகயும் அக்கறையாகவும் பெரும்பாலும் ஒயிட் அண்ட் ஒயிட், க்ளீன் ஷேவிலும் இருக்க வேண்டும். அப்பெண் அவர்மீது வெறுப்பை கக்கிக்கொண்டே இருக்க வேண்டும். எந்நேரமும் கோபமாகவும், படுக்கையில் கூடத் தன்னுடன் சேர்க்காமலும் இருக்க வேண்டும். பின் இந்த தவறை புரிந்துக்கொண்டு, வருந்தி, திருந்தி, அருந்தி மீண்டும் தன் கணவனோடு சேர்ந்துவிட வேண்டும்.

எ.கா காட்சி :

அந்த பெண்ணுக்கு இரவு பத்து பத்துக்கு, சென்னை ‘இரும்பு தேசத்து கரும்பு மனிதர் ஆல்பாஸ் அரியர்பாஸ் அரசன் ஐயா எடப்பாடி மாண்புமிகு மத்திய ரயில்நிலையத்திலி’ருந்து, ‘இந்தி தெரியாது போடா’ ராஜதானி எக்ஸ்பிரஸில் தாம்பரத்துக்கு ட்ரைன் இருக்கிறது. அப்போது ’சோ….’ என்று மழை கொட்ட வேண்டும். போன் வேறு சார்ஜ் இல்லாம போய்விட வேண்டும்.

அந்த நேரத்தில் கணவன் தன் போனை கொடுத்து, ஓலா புக் செய்து (ஊபர் ஆப்பர் இருந்தால் ஊபர் ஓகே), சென்னை ‘இரும்பு தேசத்து கரும்பு மனிதர் ஆல்பாஸ் அரியர்பாஸ் அரசன் ஐயா எடப்பாடி மாண்புமிகு மத்திய ரயில்நிலையத்தி’ற்கு கொண்டு வந்து விட வேண்டும். இதனால் அந்த பெண்ணுக்கு அவருடைய நல்ல மனசு புரிய வருகிறது. தான் எவ்வளவு மோசமானவளாக இருந்தோம் என்பதை உணர்ந்து கண்ணீர் வடிக்கிறார். ‘ஒரு பொண்ணோட வெற்றிக்கு பின்னாடி மட்டுமில்ல, ஓலா ரைடுக்கு பின்னாடியும் ஒரு ஆண் தான் இருக்கான்’ என்று புரிந்துக்கொள்கிறாள். ஓலா ட்ரைவரும் ஆண் தான் ஆனால் அவர் முன்னாடி இருப்பார்.

Sunday, September 6, 2020

உன்னி ஆர் பதில்


 

கே : லீலா என்ற சிறுகதை, லீலா என்ற சினிமா ஆகும் பொழுது, அதில் பெரிய மாற்றங்கள் செய்யவேண்டியதாக இருந்திருக்குமே?

பதில் : ஒருபோதும் ஒரு கதையின் வாக்கியங்களையோ பிரயோகங்களையோ, சினிமாவின் மொழிக்கு மாற்ற முடியாது. ஒன்று வார்த்தை. இன்னொன்று விஷுவல். அதாவது சினிமாவில் சிலவிஷயங்களை சொல்ல வேண்டியதில்லை. நீங்களே பாருங்கள் என்று விஷுவலாக காட்டமுடியும். லீலா என்ற திரைக்கதை விஷுவலாக/விஷுவலுக்காக உருவாக்கப்பட்டது. Blow up என்ற சினிமா இதற்கு நல்ல உதாரணம். Blow up என்ற கதையும் Blow up என்ற சினிமாவும் வெவ்வேறு சுபாவங்களை உடையது. லீலா என்ற சிறுகதை கதையாக மாறிய ரீதியில், லீலா என்ற சினிமா சினிமாவாக மாறியது ரீதியில் தான் இந்த லீலா என்ற திரைக்கதையும் உருவானது.

Translated from Maneesh Narayanan 's interview ..

Saturday, September 5, 2020

பஹத் பாஸில்



 கேள்வி : மகேஷாக பஹத் நடித்தது குறித்து ஷ்யாம் புஷ்கரன் கூறும்பொழுது, ஆலப்புழாவிலுள்ள (பஹத்தின் சொந்த ஊர்) ஒரு நாட்டுப்புறத்தான் பஹத்துக்குள்ளேயிருக்கிறான் என்றிருக்கிறாரே?


பஹத் : நம்மை போல இல்லையென்றாலும், நாம் பார்த்த ஒரு ஆளை போல் உள்ளவன் தான் மகேஷ். ஷியாமும் திலீஷும் மகேஷ் கதாப்பாத்திரம் பற்றி விளக்கியது மிகத்தெளிவாகயிருந்தது. படப்பிடிப்புக்கு போகும் முன் இருவரும் என்னை ஒரு சாயா கடைக்கு கூட்டி சென்றனர். அங்கு தான் இந்த கதாப்பாத்திரம் குறித்து பேசினோம். அடுத்து தான் படப்பிடிப்பிற்கு சென்றோம். அது போல ஒரு இந்திய பிரணய கத படத்தில் நான் பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டு ஓடுவது போல் ஒரு காட்சி வரும். அதை நெடுமுடி வேணு (ஆலப்புழாவிலுள்ள நெடுமுடியை சேர்ந்தவர் மூத்த நடிகர் நெடுமுடி வேணு)  பார்த்து விட்டு, "இந்த ஓட்டம் எனக்கு என் வாப்பாவை நினைவுப்படுத்துகிறது. அவர் காலேஜ் படிக்கும் காலத்தில் ஸ்ட்ரைக் நடக்கும் பொழுது, பாக்கெட்டில் உள்ள வண்டிக்கூலி தொலைந்துவிடக்கூடாது என்பதற்காக இப்படி தான் பாக்கெட்டில் கை வைத்துக்கொண்டு ஓடுவாராம்" என்றார். ஒரு இந்திய பிரணய கத முதல் நாள் கதை கேட்டு, அடுத்த நாள் படப்பிடிப்பிற்கு சென்ற படம். அது ஹியூமர் உள்ள கதை என்றாலும், அந்த கதாப்பாத்திரத்தின் வேதனையை தான் நாம் (நடிகன்) எடுத்துக்கொள்ள வேண்டும். வேட்டி அவிழ்க்கப்பட்ட மகேஷின் வலியை நாம் (நடிகன்) உணர்ந்தால் தான், அந்த கதாப்பாத்திரத்தை உருவப்படுத்தவும், அதை மெருகேற்றவும் முடியும். மகேஷை போல வாட்சில் மணி பார்க்கும் ஆட்களை நான் நிறைய கண்டுள்ளேன். கையிலுள்ள வாட்சில் மணியை பார்த்துவிட்டு, நம்மிடம் மீண்டும் மணி என்ன என்று கேட்கும் ஆட்கள் உண்டு. நம்முடைய பார்வையையும் அப்ஸர்வேஷனையும் ஒன்றாக்கும்போது, கதாப்பாத்திரத்தோடு நெருங்கிவர முடியும்.


( மலையாள மூலம் : மனீஷ்நாராயணன் சில வருடங்களுக்கு முன்பு பஹத்தை எடுத்த பேட்டி)

நசீர் திரைப்படம்




 1. சிறுபான்மையினர்/ஒடுக்கப்பட்டவர்கள் அப்பாவிகளாகவோ, ஏழைகளாகவோ நல்லவர்களாகவோ இருப்பது மட்டும் அவர்கள் ஒடுக்குமுறைக்கு ஆட்படுவதற்கு காரணமல்ல. பொருளாதார ஒடுக்குமுறை வேறு. சமூக ஒடுக்குமுறை வேறு. பெரும்பான்மை சமூகத்தை சேர்ந்த ஒரு ஏழையும், சிறுபான்மை/ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு ஏழையும் ஒரே தட்டில் வைக்க முடியாது. 


2. சிறுபான்மையினரின்/ஒடுக்கப்பட்டவர்களின் அடையாளங்களினாலேயே அவர்களின் இருத்தல் பெரும்பான்மையினரின் நாஜித்தனத்தால் அச்சுருத்தப்படுகிறது. அடையாளங்கள் எனில், கலாச்சாரம், வழிப்பாட்டுமுறை, உடை, உணவு, அதன் சமுதாய/குடும்ப அமைப்பு, கலையிலக்கியம், அதன் சமுதாய சடங்குகள் போன்றவை.  ஆகவே, அந்த அடையாளங்களே அவர்களின் போராட்டத்தில் ஒரு பெரிய/முக்கிய கருவியாக இருக்க வேண்டும். மேலும் அந்த அடையாளங்களை முன்னிருத்தலே ஒரு அரசியல் செயல்பாடு தான். (இதில் தன் அடையாளகங்களை முன்னிறுத்தி, சுய சமுதாய/இன பெருமை பேசுதல் சேராது. மேலும் அச்சிறுபான்மையினரின் சமூகநிலையை பொறுத்து அடையாள அரசியலின் வரையறை மாறுதலுக்கு உட்படலாம்  )


3. சிறுபான்மையினரை எவ்வளவு  விமர்சனத்திற்கு உட்படுத்துகிறோமோ, அதே அளவு அவர்கள் சமூகத்தில் எவ்வித ஒடுக்கப்படலுமின்றி இயங்குவதற்கான ஜனநாயகத்தையும் உறுதிப்படுத்த வேண்டும்.


4. அரசியல் பேசாத, வெறும் இரக்கமும், கனநேர செயற்கையான சோகக்காட்சிகளும், எவ்வித அரசியல் தீர்வுக்கும் இட்டு செல்லாது. மாறாக அது பார்வையாளரின் அரசியல் பார்வையை (சிறுபான்மையினர்/ஒடுக்கப்பட்டோர் மீதான) மட்டுப்படுத்தி, அரசியல் பாதையிலிருந்து எதிர்ப்பக்கம் திருப்பிவிட்டு, உண்மையான குற்றவாளிகளை பார்வையாளர்களின் கண்களிலிருந்து தூரமிட்டு செல்லும்.


ஆனால் ஜிப்ஸி, ட்ரான்ஸ், மோடி அண்ட் பீர், நஸீர் போன்ற படங்கள் இதை செய்யத்தவறியதாகவே எனக்கு தோன்றுகிறது.



தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

  கொஞ்சம்   யோசித்துப்   பாருங்கள் .. 2014,  டிசம்பர்  3,  இரவு   சுமார்   எட்டு   மணி   இருக்கும் “ மூக்கின்   மேலே மூக்குத்தி   போலே மச்சம...