Friday, June 4, 2021

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

 


கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்..

2014, டிசம்பர் 3, இரவு சுமார் எட்டு மணி இருக்கும்

மூக்கின் மேலே
மூக்குத்தி போலே
மச்சம் உள்ளதே…” அதுவா ?

என்று நீங்கள் கேட்க,

கோயமுத்தூர் முனியாண்டி விலாஸில்
அடுப்பில் கிடந்து கருகும்
திருமங்கலத்து பரோட்டா மாஸ்டரொருவன்

அதுவா..?
அதுவா…?
அதுவா….?

என்று திருப்பிக் கேட்டான்

அப்போது உங்களுக்குச் சிலிர்த்துக்கொண்டதா எஸ்.பி.பி ஸார் ?

  • கவிஞர் இசை

கண்டிப்பாக அந்த திருமங்கலத்துக்காரனுக்கு சிலிர்த்திருக்கும். இசையின் இந்த கவிதையே சொல்லிவிடும், ஏதோ ஒரு கோடியில் இருக்கும் கிராமத்தானுக்கும் பாலுவுக்கும் இடையிலான உறவை பற்றி.

சாமானியன் ஒருவனுக்கு பாலுவின் குரல் அவனின் எல்லாவித உணர்வையும் வெளிப்படுத்தும் ஒரு பெரும் ஆற்றலாக இருந்தது. அந்த ஆற்றல் அவனுக்காக எல்லாம் செய்தது.

கல்லூரியிலும், அரசு பேருந்துகளிலும் மினி பஸ்களிலும் எதிர்வீடுகளிலும், ஊர்த் திருவிழாக்களிலும், கல்யாண வீடுகளிலும், அவனுக்காக காதல் தூது சென்றது. அவன் பேச வேண்டியதை எல்லாம், அவளின் காதருகே உள்ள முடியை கோதி விட்டப்படியே கொஞ்சி பேசியது. சில இடங்களில் முரட்டுத்தனமாக கட்டியணைக்கவும் செய்தது. இரவுகளில் அவளோடு காமம் பேசியது, அவள் இல்லாமல் அழுது கரைந்தது, அவளின் பிரிவை சொல்லி சொல்லி கண்ணீர் வடித்தது. அவனின் தற்கொலைகளை தடுத்து, அவளை முழுதாக மறக்கடித்து, ஒரு புது வாழ்க்கைக்கான வழியையும் பாடியது. அவனுடைய ஆன்மாவுக்கு பிரதிநிதியாக ஒலித்தது. அவன் அணுவின் முனங்கலையும் தீண்டி எடுத்து அவனுக்கு முன் நிறுத்தியது.

இத்தேகம் மறைந்தாலும் இசையாய்
மலர்வேன் கேளாய் பூமனமே”  

அவனின் வலிகளும் அதன் வார்த்தைகளும் ஒன்றையொன்று தழுவி கட்டிப்புரண்டு ஓடும் பெருநதியாக, அதன் மெல்லிய ஆசுவாச மூச்சாக, வாழ்க்கை முழுதும் அவனுடன் வரும். சூல் கொள்ளும் வயிற்றையும், பாலூறும் முலையையும் ஒரு ஆணுக்கு கிடைக்கச் செய்தான்

பாலுநான் உங்கள் ரசிகன்நான் குரலற்றவன்நான் ஒரு குரல் கொண்டது உங்களால் தான்உங்கள் குரலால் நான் மோட்சம் பெற்றேன்

டேய் தம்பிநான் தான்டா உன் பாலுநான் உணர்வு இல்லாதவன்உன் உணர்வால் என் குரல் உயிர் பெற்றது.”

சில மாதங்களுக்கு முன் இசைஞானி இளையராஜாவின் இசை கச்சேரிக்கு சென்றிருந்தேன். உடன் வந்திருந்த ராஜேந்திரன் அண்ணனுக்கு பாலு ஓர் நிரந்தர திருத்தலம். ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ முதல் ’ஒருவன் ஒருவன் முதலாளி’ வரைக்கும் எல்லாமே ஆதர்சம். எல்லாவற்றுக்கும் அவரால் ஒரு கதை சொல்ல முடியும். அது கேட்பவரை சிரிக்க வைக்கவும் செய்யும், அழுக வைக்கவும் செய்யும்.

‘இளைய நிலா பொழிகிறது’ என்ற வரிகளோடு ஒரு பிரம்மாண்டம் மேடையை நிரப்பிக்கொண்டிருந்தது. ராஜேந்திரன் அண்ணன் கொஞ்சம் கொஞ்சமாக தன்னுள் பாலுவை நிரப்பிக்கொள்ள தொடங்கினார். நானும் என்னைவிட இரு மடங்கு வயதுள்ள, போன தலைமுறைக்காரரும் ஒரு குரலால் இணைக்கப்பட்டோம். மனவிணைகள் எல்லா தலைமுறைக்கு ஒன்று தானே?

மூச்சு விடாம பாடுறேன்னு சொன்னீங்களே..”

பாடகனாக வேண்டும் என கனவு கண்ட எல்லோருக்கும் ஆதர்சமாக இருந்தார். ஆசானாய் இருந்தார். எல்லா தெருக்களிலும், மேடை கச்சேரிகளிலும் பல முகங்களாக பாலு ஒலித்தார். பாடல்களின் இடையில் மெல்லிய குறும்பு சிரிப்போடு பாடிக்கொண்டு திரிய யாருக்கு தான் ஆசை வராது.

இது போல எல்லோருக்குமாக பெய்யன பெய்யும் மழையாய் சிலராலே தான் இருக்க முடிகிறது. அவர்களை இறுகப்பற்றி நாம் வளர முடிகிறது. எங்கள் குரல்களாக நீ வந்தாய், நாளை நாங்கள் இல்லாது போனாலும். நீ ஒலித்துக்கொண்டே இருப்பாய் பாலு.

இன்று பாலுவின் 75 ஆவது பிறந்தநாள்.



Friday, October 9, 2020

‘அப்பாலே போங்கள் ஜாதவ்’ – சிஎஸ்கேயியன்ஸ்

 


’கைக்கு எட்டியது கல்லாப் பெட்டிக்கு எட்டவில்லை’ என்பது போல ஆனது நேற்றைய சென்னை அணியின் தோல்வி.

மூன்று தொடர் தோல்விகளுக்குப் பின், பஞ்சாப் அணியுடனான போட்டியில் ‘நான் வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று கம் பேக் கொடுத்தது சென்னை அணி. வாட்சனும் டூப்ளஸிசும் பஞ்சாப் அணியைப் பஞ்சு பஞ்சாகப் பறக்க விட்டனர். ’சிங்கத்த டிவில பாத்துருப்ப, லயன் டேட்ஸ் விளம்பரத்துல பாத்துருப்ப, ஏன் அனுஷ்கா கூட டூயட் ஆடிக்கூட பாத்துருப்ப. வெறித்தனமா சேஸ் பண்ணி பாத்துருக்கீயா? பாத்துருக்கீயா?’ என்று மயில் வாகனத்தின் கோட்டையை அடித்துத் துவைத்தனர்.

”போடா எல்லாம் விட்டுத் தள்ளு பழசயெல்லாம் சுட்டுத் தள்ளு, புதுசா இப்ப பொறந்தோம் என்று எண்ணிக்கொள்ளடா டேய்” என்று காட்டுக் குயில்களாக வெற்றிக் கொண்டாட்டத்தை பாடித்திருந்தார்கள் சென்னை ரசிகர்கள். ஆனால்  சென்னை அணியின் அடுத்த போட்டியிலேயே, ”பயணம் எங்கே போனால் என்ன பாதை நூறு ஆனால் என்ன தோட்டம் வச்சவன் தண்ணீர் விடுவான் சும்மா நில்லடா…டோய்..” என்று கேதர் ஜாதவ் எசப்பாட்டுப் பாடி, தோல்வியை அவர்களுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளார்.

கல்கத்தாவுடனான இந்தப் போட்டியில் சென்னை அணிக்கு 168 ரன்கள் வெற்றி இலக்காக வைக்கப்பட்டது. போகிற போக்கில் எடுக்கிற ரன்தான். ஓப்பனிங் வீரர்களும் கௌரவமான தொடக்கத்தைக் கொடுத்தார்கள். 9 விக்கெட்கள் கையில் இருக்க, 47 பந்துகளில் 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொகுசு மோடில் இருந்தது சென்னை அணி. அடுத்ததாக தோனி இறங்கினார். ’படையப்பா ரொம்ப நேரம் எடுத்துக்காத சீக்கிரம் முடிச்சுட்டு வந்துரு’ என்று படையப்பா லட்சுமி மோடில் ரசிகர்களும் இருந்தனர். ஆனால் வாட்சன், தோனி, சாம் குரன் என்று வரிசையாக பிக் பாஸ் பார்க்க நடையைக் கட்டிக் கிளம்பினார்கள்.

’தம்பி வா.. ஃபினிஷ்ங் ஷாட் அடிக்கவா’ என்று பிராவோவை தோனி அழைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். அஞ்சாநெஞ்சர் பிராவோவின் வருகைக்காக வாரிச்சுருட்டி எழுந்து உட்கார்ந்தனர். ஆனால் ஏரோபிளைன் சைஸ் ஏமாற்றமே வந்து அவர்கள் தலையில் தரையிறங்கியது.

’கடைசியா தான் வந்தார் விநாயக் மகாதேவ்..’ என்பது போல கேதர் ஜாதவ் கையில் பேட்டுடன் களத்தில் வந்தார். ப்ளேயிங் லெவனில் மட்டுமல்ல துபாயிலேயே நீங்கள் இருக்கக்கூடாது ஜாதவ் என்று சென்னை ரசிகர் அன்புக் கட்டளையிடும் அளவிற்கு இந்த ஐபிஎல்-லில் அவரின் பேட்டிங் இருந்தது.

’செவ்வல தாவுடா தாவு’ என்று ரசிகர்கள் ஊக்கம் கொடுத்தாலும், ‘எங்க தாவுறது நானே தவந்துக்கிட்டிருக்கேன்’ என்று பேட்டிங் சொதப்பிக்கொண்டிருந்தது சென்னை அணி.

இதில் ஜாதவின் அலப்பறைகளைப் பார்க்கப் பார்க்கதான் ரசிகர்கள் வெறியானார்கள். கடைசி நேரத்தில் புது பேட் வேண்டும் என்று அடம் பிடித்து வாங்கிக்கொண்டார். மேலும் சுற்றிலும் எத்தனை வீரர்கள், எந்தெந்த ஆங்கிள்களில் நிற்கிறார்கள், காலை என்ன சாப்பிட்டார்கள், பிக் பாஸில் யாருடைய ஆர்மி சேர்ந்தவர் என்பது வரை கைகளாலேயே அளந்துகொண்டிருந்தார். ’இருக்கு.. இன்னைக்கி சம்பவம் இருக்கு’ என்று ரசிகர்களை நம்ப வைத்தார். ஆனால் மொத்தம் 12 பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே அடித்தார்.

நாலு ஓவரில் 43 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்த அணி, அடுத்த மூணு ஓவர்களுக்கு 23 ரன்கள் மட்டுமே எடுத்து, கடைசி ஓவருக்கு 26 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. கடைசி 8 பந்துகளில் மொத்தமே ஒரு ரன்தான் எடுத்து சென்னை அணி தோல்வியைத் தழுவியது.

ஜாதவை மட்டும் இதில் குற்றம் சொல்ல முடியாது. மிடில் ஆர்டர் முழுதுமே சொதப்பியது. தோனி உட்பட யாரும் ரன் ரேட்டை மெயின்டெயின் பண்ணவில்லை. அடித்து ஆடக்கூடியவர்களான குரானும், ஜடேஜாவும் சேர்ந்து டொக்கு வைத்தனர்.

எந்தக் காரணத்திற்காகத் தொடர்ந்து சொதப்பிக் கொண்டிருக்கும் ஜாதவை ப்ளேயிங் லெவனில் தோனி எடுக்கிறார். அதிலும் இக்கட்டான சூழலில் பிராவோவிற்குப் பதிலாக ஏன் இவரை இறக்கினார் என்பது தோனிக்கே வெளிச்சம்.

ஆனாலும் ஜாதவ் மேல் உள்ள கோபம் ரசிகர்களுக்குக் குறையவே இல்லை. ‘அப்பாலே போங்கள் ஜாதவ்’ என்று ரசிகர்கள் அவரைக் கண்டாலே ஓடுகிறார்கள். ஆறு போட்டிகளில் நாலில் தோல்வியைத் தழுவியது இக்கட்டான கட்டத்திற்குச் சென்னையை இழுத்துச் சென்றிருக்கிறது.

Tuesday, October 6, 2020

பிக்பாஸில் மட்டுமா சாதி? துப்புச்சுக்கு துப்புச்சுக்கு பார்வை

 


நான் சென்னை வந்த புதிதில், மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதியில் தங்கியிருந்தேன். அதே தெருவில் என் சொந்த ஊரை சேர்ந்த 70 வயதை கடந்த ஒரு பெரியவரும் இருந்தார். முப்பது ஆண்டுகளுக்கு முன் சென்னை வந்து குடியேறியவர். பேச்சு வழக்கை வைத்து நான் எந்த ஊரை சேர்ந்தவன் என்று தெரிந்துக்கொண்டார். பின் பார்க்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஊரை பற்றி, குடும்பத்தை பற்றி பேச்சுக்கொடுத்து, நான் என்ன சாதி என்று போட்டு வாங்க பார்ப்பார்.

“தம்பி நீங்க மேலூர் பக்கட்டெல்லாம் போறதுண்டா? நமக்கு கோயில் அங்கிட்டு தான் வெள்ளரிப்பட்டி. அத்த யாரோ இருக்கதோ சொன்னீங்களோ முன்ன (போட்டு வாங்குறது)”

“இல்ல தாத்தா. எங்க அத்த செக்கானம்.”

“அட செக்கானமா அப்டி சொல்லுங்க. எங்க மதினி செக்கானம் தான். அங்கிட்டு எங்க உங்க அத்த?”

“அதாவது தாத்தா. செக்கானத்துலருந்து உசில போற ரோட்ல எட்டு கிலோ மீட்டர்ல லெப்ட் எடுத்தா டோலக்பூர் வெளக்கு வரும். அங்கெருந்து 2 கிலோ மீட்டர் தான். ஜெஸ்ட் வாக்கபில் டிஸ்டன்ஸ்.”

“டோலக்பூரா ??? அதுல யாரு வீடு?”

“டோலக்பூர்ல சோட்டா பீம் ஐயா வீடு எதுனு கேட்டா ஜட்டி போடாம சுட்டி டிவி பாக்குற கொழந்த கூட சொல்லும். மேக்கால விக்ரபாண்டி வரைக்கும் நெல கெடக்கும். பீம் மாமா பையனுக்கு தான் எங்க டோரா அத்தைய கட்டி கொடுத்துருக்கோம். கொரோனா டைம்ங்குறதால எங்கயும் இப்ப பயணங்கள் போறதில்ல டோரா அத்த. அந்த பக்கட்டு போனிங்கனா கண்டிப்பா பீம் மாமாவுக்கு கொஞ்சம் லட்டு வாங்கி கொடுத்துட்டு போங்க.”

கொஞ்சம் நேரம் திருதிரு என்று முழித்துக்கொண்டிருந்தார்.

ஒருவனின் சாதியை தெரிந்துக்கொள்வதற்கான தேவை, அவன் ’இன்னார் மகன் இன்னாராக’ இருந்தால் அவனுக்கு கிடைக்கும் நன்மைகள், அவன் வேறொரு ’இன்னார் மகன் இன்னாராக’ இருந்தால் அவனுக்கு கிடைக்கும் தீமைகள் போன்ற கேள்விகள் எல்லாவற்றையும் என்னை போன்ற ஏதோவொரு ‘இன்னார் மகன் இன்னார்’கள் மண்டையில் ஏற்றிக்குழப்பிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அதேநேரம் ஒரு சராசரி மனிதன் ஒருவனால், மற்றொருவனின் சாதியை அறிந்துக்கொள்ள கொஞ்சம் உழைக்க வேண்டியிருக்கிறது. பாவம். அதிலும் என்னை போன்ற ஏழரைகளிடம் சிக்குபவர்கள், ஏடாகூடமான பதில்களால் குழம்பி போய் முடிக்கொட்டி, ஏர்வாமார்டின் ஹேர் ஆயில் வாங்க வேண்டி இருக்கிறது.

இன்று ஒரு வீடியோ பார்த்தேன். பல லட்சம் பேர் பார்க்கும் பிக்பாஸ் ஒரு டிவி நிகழ்ச்சியில் அதன் பங்கேற்பாளர் சர்வசாதாரணமாக “உங்க சாதி என்ன?” என்று கேட்கிறார். அதற்கு அந்த நபரும் தன் சாதியை வெளிப்படையாக சொல்கிறார்.

இதை பார்த்த என் நண்பர் ”மாடர்ன் ஜென்ரேஷன்ல எப்டி இப்டி வெளிப்படையா சாதிய கேக்குறாங்க?” என்று அலுத்துக்கொண்டார். நவீனமும் தொழில் நுட்பமும் அவ்வளவு எளிதில் சாதி அமைப்பை விழுங்கி விடுமா என்ன?

கால மாற்றத்தில் நிகழ்கிற அத்தனை மாற்றங்களையும் அந்த அமைப்பு உண்டு செரித்துக் கொள்ளும். சாதி என்றில்லை, மதம், மொழி எல்லாமுமே எல்லா மாற்றங்களையும் உள்ளிழுத்து, தன்னை பலப்படுத்திக் கொள்ளும். சினிமா, இலக்கியம், தேர்தல் அமைப்பு என்று எல்லாவற்றையும் தனது ஆயுதமாக்கிக்கொள்ளும், உணவாக்கிக்கொள்ளும். அப்போது தான் அது வாழும். இல்லை என்றால் அது மற்றொன்றால் விழுங்கப்பட்டுவிடும். அது தான் சமூகத்தின் நியதி.

சாதி போன்ற பழமையான அமைப்பு இதற்கு முன் எத்தனை வகையான கலாச்சார, பண்பாட்டு மாறுதல்களை கண்டிருக்கும். அவை எல்லாவற்றையும் நெகிழ்வு தன்மையாக்கி உள்ளிழுத்துக்கொண்டு, தானும் ஒரு நெகிழ்வு தன்மையுள்ள ஒன்றாக மாறியிருக்கும். ஆனால் இரண்டாவதாக சொன்ன நெகிழ்வுத் தன்மை என்பது, தன்னை பலப்படுத்திக்கொள்ள எடுக்கும் அவதாரம். இதன் சமீபத்திய உதாரணம் ஒன்றை பார்ப்போமே.

திருமண மேட்ரிமோனிகளை எடுத்துக்கொள்வோம். பெரும்பாலும் மெத்தப்படித்தவர்களாலும், நாகரீகத்தில் மேல்தட்டில் இருப்பவர்களாலும் நுகரப்படும் திருமணத்திற்கான ஒரு நவீன தளம் (திருமண முறையும் ஒரு நவீன தொழில்நுட்பத்தை இழுத்துக் கொண்டது).

நவீன தளம் என்பதால் அங்கு சாதிகள் இல்லாமல் இல்லை. மாறாக சாதிக்கு ஒன்று உள்ளது. ‘இந்த சாதிகள் எங்களுடைய  தளத்தில் பதிவு செய்துக்கொண்டால், இந்த சாதியிலேயே வரன் கிடைக்கும்’ என்று வெளிப்படையாக விளம்பரம் செய்யப்படுகிறது. அது சமூகத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை.

அந்த விளம்பரங்களில் வருபவர்கள் எல்லாருமே நவயுக இளைஞர்களும், இளைஞிகளும் தான். எல்லா நவீன தொழில்நுட்பத்தையும் அறிந்து, அவற்றின் உதவியாலேயே தன் ஒவ்வொரு நாளையும் வாழ்பவர்கள். அந்தத் தளத்தின் மூலம் தனக்கு கிடைத்த சுயசாதி துணை பற்றி பெருமையாக பேசுகிறார்கள். ஏன் இந்த ’கல்வி’ பெற்ற ’தொழிற்நுட்ப’ தலைமுறையால் சாதியை தூக்கி எறிய முடியவில்லை?

தொழில்நுட்பம் மட்டுமல்ல கல்வி, தேர்தல் அதிகாரம் போன்றவற்றை வெறுமனே சமுதாயத்தின் மேல் படரவிடுவதால் எவ்வித சமுதாய முன்னகர்வும் நிகழாது. மாறாக பழமைகள் மேற்கொண்டு தன்னை நிலை நிறுத்திக்கொள்ள தான் உதவும். அதை ஆயுதமாக்க வேண்டும். நமக்கு ஏற்றார் போல அதை வளைத்து, நாமும் வளைந்து அதை நமக்கு கருவியாக்கிக்கொள்ள வேண்டும். தரையில் இறங்கி உழ வேண்டும். காற்றில் கயிறு திரிக்கக்கூடாது. ஆண்டனிக்களை அடக்க பாட்ஷா பாய்களாக தான் மாற வேண்டும்.

இவை எல்லாம் நடக்கும் வரை பிக்பாஸ் வீடுகளில் மட்டுமல்ல, பிட்சா ஷாப்புகளில் கூட இந்த ’கேள்விகள்’ கள்ளிப்பூக்களாக வந்துக்கொண்டே தான் இருக்கும். நாம் தினமும் பறிக்க முடியாது. அதனால் சீக்கிரத்தில் கள்ளிச்செடியையே தூரோடு வெட்டி எறிந்து விடுவோம்.

சரிடா அதுக்கு இத அப்டியே விட்றலாமானு கேட்டா.. அதெப்புடி விட முடியும். இந்த ‘குறும்படத்தின்’ மூலமே நம் வேலை தொடங்குவோம். ஏன்னா யாரும் ஓடவும் முடியாது. ஒளியவும் முடியாது. ‘காமன்மேன்’ இஸ் வாட்சிங். துப்புச்சுக்கு துப்புச்சுக்கு..

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

  கொஞ்சம்   யோசித்துப்   பாருங்கள் .. 2014,  டிசம்பர்  3,  இரவு   சுமார்   எட்டு   மணி   இருக்கும் “ மூக்கின்   மேலே மூக்குத்தி   போலே மச்சம...