Tuesday, December 11, 2018

ஏன் அவன் நம் பாரதி?


எந்த சமூக மாற்றமும் அதனதன் காலக்கட்டத்தின் சமூக கட்டமைப்பை, அதன் இறுக்கத்தை சார்ந்தே முளைத்து , வளர்ந்து, தேய்ந்து, அதற்கடுத்த ஒன்றாக பரிணாமித்தோ , அல்லாது இல்லாமலோ அழிந்து போகும். ஆகா எக்காலக்கட்டத்தையும்  பயிலவோ, அறியவோ, உணரவோ அச்சமூகத்தின் முழு சாரத்தையும் பயில்வது அடிப்படையான ஒன்று. சுப்பிரமணி, பாரதியாக வாழ்ந்தது 1900களின் தொடக்கத்தில். ஏழ்மை கசிந்தோடிக்கொண்டிருக்கும் குடும்பத்தில், ஆச்சாரத்தை தலையில் வைத்து ஆடிக்கொண்டிருக்கும் ஒரு பார்ப்பண சமூகத்தில். இத்தனை மாற்றங்களுக்கு பின்னும், இன்றும் சாதிகள் நின்று வேட்டையாடிக்கொண்டிருக்கும் அதே தூத்துக்குடியின் ஒரு கிராமத்தில். ஆனால் அதிலிருந்து தான் அவன் கேள்விகள் கேட்டான். தெருவே திட்டும், ஊரே குரைக்கும். ஆனாலும் அவன் தான் கண்ட வற்றுக்கெல்லாம் கேள்விக்கேட்டுக்கொண்டிருந்தான். பாரதி பரிணாமித்துக்கொண்டிருந்தான். அவன் பெரியாரை பார்த்தோ, கலைஞரை பார்த்தோ , இல்லை யாரையும் தொற்றிக்கொண்டோ அவன் முளைக்கத்தொடங்கவில்லை. எல்லா புரட்சியாளர்களையும் போல , அவன் சமூகமே அவனை உருவாக்கியது. பெண்கள் கல்வியை பற்றி பேசினான். சாதிகளுக்கு எதிராக பேசினான். ரஷ்ய புரட்சியை பற்றி பேசினான். ரஷ்ய புரட்சிக்கு காரணம் பராசக்தி தானென்றான். தவறுதான். ஆனால் அப்போது அதை பற்றி ஒருவன் பேசினானே.  'பூணூல் தானே உங்களுக்கு எல்லாம் உசத்தி' என்று தாழ்த்தப்பட்டவர்களுக்கு பூணூல் அணிவித்து அவனுக்கு தெரிந்த , இயன்றதை செய்தான். தான் சார்ந்த சாதிக்கெதிராக பேசி, எழுதி , 'சாதி விலக்கு' பெற்றான். சிறிது சிறிதாக (உண்மையில் 40 வருட வாழ்க்கையில் இது வேகவேகமாக தான்) தன்னை அறிந்துக்கொண்டான். சமூகத்தையறிந்துக்கொண்டான். தன்னை திருத்திக்கொண்டான். சமூகத்தை திருத்த முயன்றுக்கொண்டிருந்தான். அவன் நீங்கள் சொல்வது போல், அரைவேக்காடு அல்ல. பெரியார் எப்படி ராமசாமியிலிருந்து உருமாறி வந்தாரோ அப்படி மாறிக்கொண்டிருந்தான். பெரியார் வேறு ராமசாமி வேறு. அது தான் விஷயமே. ராமசாமி எந்த வயதில் பெரியாராக மாறினார்? 20 வயதிலேவா? சாதிகளே இல்லையென்ற பெரியார், குடியரசில் 'ஈ.வெ.ராமசாமி நாயக்கர்' என்று கையழுத்திட்டுக்கொண்டிருந்தார். பின் தான்  நாயக்கரை நீக்கினார். கல்யாணம் தான் பெண்களை அடிமையாக்குகிறதென்று பக்கம் பக்கமாக பேசி எழுதி வந்த பெரியார், தன் கைகளாலேயே பல சுயமரியாதை திருமணங்களை நடந்திவைத்தார். பல முற்போக்கு பிராமணர்களுடன் தொடர்பில் இருந்தார். முன்பு ஒரு கட்சியை அல்லது கொள்கையை ஆதரித்துவிட்டு , சிறிது காலம் பின் அதற்கு எதிராக செயல்பட்டார். கலைஞர் ராமானுஜரை பற்றி தொடர் எழுதினார். ஏன் அவருக்கு பெரியாரை பற்றி எழுத தெரியாதா என்ன?  உங்கள் 'குருட்டு முற்போக்கு கூற்று'ப்படி பார்த்தால், மேல் சொன்ன இருவருமே அரைவேக்காடுகள் தான் . ஆனால் உண்மை அதுவல்ல. இருவரும் சமூகத்தை அறிந்தவர்கள். தன் நீண்டகால திட்டங்களுக்கான வேலையறிக்கையை எவ்வாறு முன் நகர்த்த வேண்டுமென்ற சுய அறிவை பெற்றவர்கள். தன்னை கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமித்துக்கொண்டவர்கள். கிண்டியிலிருந்து கோயம்பேடு போக வேண்டுமென்றால், நேராக கோயம்பேட்டிற்கு  குதித்துப்போக முடியாது. அசோக் பில்லர், வடபழனி என்ற ஒரு பாதையிருக்கிறது. அதுபோல தான் எந்த சமூக மற்றமும். ஒரே தாவலில், ஒரே இரவில் கிடைத்துவிடாது. அதற்கான உழைப்பென்பதும் பாதையென்பதும் இருக்கிறது. பெரியாரோடு ஒப்பிட்டு, பாரதியை இகழ்வதென்பது ஒரு சர்ரியலிஸ் பேதமை. ஒருவேளை 'ராமசாமி' நடு ரோட்டிற்கு வந்திருந்தால், அவருக்கு மரியாதை கொடுத்து சோறு போட ஒரு கூட்டம் இருந்தது. அவர் தந்தை ஊர் செல்வந்தர். ராமசாமியிடம் சொத்து இருந்தது. பெரியாரிடமும் சொத்து இருந்தது. செல்வாக்கும் இருந்தது. பாரதியிடம் என்ன இருந்தது? வறுமை. கோபம். தமிழ். அவ்வளவு தான். அதிலிருந்து தான் அவன் பேசினான். எழுதினான். கலகம் செய்தான். தமிழுக்கு ஒரு புது வடிவம் கொடுத்தான். பாமரரும் படிக்கும் வகையில் கவி படைத்தான்.  அதற்கு முந்திய வடிவங்கள் பண்டிதர்களுக்கானது. மொழியின் வீரியத்தை அறிந்துக்கொண்டு அதில் தன் பணியை செய்தான். குழந்தைகளுக்கு பாட்டெழுதினான். கட்டுரைகள் எழுதினான். பல பத்திரிக்கைகள் நடத்தினான். ஆங்கிலேயர்களால் அடக்குமுறைக்கு ஆட்பட்டான். துரத்தப்பட்டான். சிறுகதைகள் எழுதியிருக்கிறான். உங்களுக்கு பாரதியொரு சிறுகதையாளனென்ற விஷயம் தெரியுமாவென்றுக்கூட தெரியவில்லை எனக்கு. அதிலும் அவன் தன் கோபத்தை காட்டிக்கொண்டிருந்தான். "அவன் அதை பேசவில்லை. இதை பேசவில்லை. அத சரியல்ல இது சரியல்ல" என்று பெரியாரின் நிழலுக்கு கீழ் உட்கார்ந்து பேசுவது பெரிதல்ல. அந்த பிச்சைக்கார பாரதிக்கு யார் இருந்தார்? எத்தனை பேர் அந்த 'வேதம் அறிந்தவன் பார்ப்பான்...' என்ற  இடையில் வரும் வரிகளை மட்டும் படிக்காமல், முழு கவிதையையும் படித்திருக்கிறீர்கள்? இன்னும் எத்துணையாண்டுகள் பார்ப்பனிய எதிர்ப்புக்கும் பிராமண எதிர்ப்புக்கும் வித்தியாசம் தெரியாமல் கடந்து அழுதுக்கொண்டிருப்பீர்கள். பெரியார் அதை விலக்கியும் அதை வாழ்ந்தும் காட்டிவிட்டார். பின்பென்னதான் உங்கள் பிரச்சனை. பாரதியை ஒரு கருவியாக உபயோகப்படுத்தாமல், மேலும் மேலும் வறட்டாக அவனை புறந்தள்ளி, அடிப்படைவாதிகளின் கைகளில் போய் சேர்த்திருக்கிறீர்கள். இதுதான் உங்கள் இணைய புரட்சியில் சாதனையா? எங்கள் பாரதியொரு கலகக்காரன் தான். அவன் கொண்டாடப்பட வேண்டியவன் தான்.
 

No comments:

Post a Comment

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

  கொஞ்சம்   யோசித்துப்   பாருங்கள் .. 2014,  டிசம்பர்  3,  இரவு   சுமார்   எட்டு   மணி   இருக்கும் “ மூக்கின்   மேலே மூக்குத்தி   போலே மச்சம...