மலையாள எழுத்தாளரும், சாக்ரியாகூத்து கலைஞருமாகிய நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, இவ்வாறு சொன்னார். தற்கால மலையாள வெகுஜன சினிமாக்கள், மக்களுக்கு ஒவ்வாத சில எலைட்டு காரணிகளை மட்டுமே நம்பியுள்ளது. நான் அதை மறுத்து பேச முடியாது. காரணம் அவர் சினிமாவிலும் எழுதுகிறார். அவருடைய ஒரு குறும்படத்திலொன்றில் பணியாற்றியிருக்கிறேன். மிகவும். தெளிவான ஆள் தான். மேலும் மலையாள சினிமா நன்றாகவே அவருக்கு தெரியும். நாம் இங்கே கொண்டாடிக்கொண்டிருப்பது மட்டுமல்ல, மலையாள சினிமா. அதற்கு அருவருக்கத்தக்க கருப்பு பக்கங்களும் உண்டு. நான் சிலரின் புலம்பல்களையும் கேட்டிருக்கிறேன். அந்த உரையாடல் நடந்தது ஒரு கார் பயணத்தில். எர்ணாகுளத்திலிருந்து, வைப்பின் தீவுகள் வழியாக அவரின் சொந்த நாடான அங்கமாலிக்கு போகையில். தீவுகளை தாண்டி தாண்டி போகையில், அவருக்கு அவரின் ஆதர்ஷ எழுத்தாளராகிய என்.எஸ்.மாதவன் அவர்களின் வரி ஒன்று நினைவு வந்தது. "தீவுகள் பாலங்களால் இணைக்கப்படுகையில், அந்த தீவு இறந்துவிடுகிறது." வைப்பின் தீவுகள் பற்றியதாகக்கூட இதை வைத்துக்கொள்ளலாம். எர்ணாகுளம் என்னும் கிராம கூட்டம் கொச்சி என்னும் பெரும் நகரமாக மாற்றப்பட்ட பொழுது, தீவுகளும் சிறுகிராமங்களும் இணைக்கப்பட்டன. கொச்சியென்னும் நகரம் உருவெடுத்தது. அந்த தீவுகளும், அந்த கிராமங்களும் , அதன் உடலாயிருந்த ஜீவராசிகளும் எங்கே போனார்கள்? கொச்சிக்கு பின்னாலிருந்து அதை தாங்கிக்கொண்டிருந்தார்கள். இருக்கிறார்கள்.
ராஜீவிற்கு வருவோம். கம்மட்டிப்பாடம் எடுத்தார். மேல் சொன்ன கதைதான். வஞ்சிக்கப்பட்ட ஒரு ஊரின் கதை. சமீபத்தில் அவரின் பேட்டியொன்றை படித்த போது தான் தெரிந்து. அவர் அதே கம்மட்டிப்பாடம் கிராமத்திலிருந்து வந்திருக்கார். கம்மட்டிப்பாடம் விவசாய நிலங்களும், அதையே நம்பியிருந்த புலையர் சமுதாய மக்களையும் கொண்டது. அவர்களோடு தான் ராஜீவ் வாழ்ந்திருக்கார். பல இடங்களில் 'நாங்கள்' என்ற வார்த்தையை போட்டே பேசியிருந்தார். 70களில் பழங்குடிகளின் பட்டியலிருந்து பட்டியல் இனத்தவர்களாக மாற்றப்பட்டவர்கள் புலையர்கள், தங்களை மீண்டும் பழங்குடிகளாக மாற்றும்படி பல ஆண்டுகளாக போராடிவருகிறார்கள். பேட்டியில் ஒரு கேள்வி. "கம்மட்டிப்பாடம் எர்ணாகுளத்திலுள்ள ஒரு காலனி பற்றிய பதிவுதானே?". பதில். " கம்மட்டிப்பாடம். ஒருபோதும் காலனியாக இருந்ததில்லை. அது அப்படி வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டது..." . அந்த பேட்டி நன்றாக தான் இருந்தது. கம்மாட்டிப்பாடம் வந்த சமயத்தில் எடுக்கப்பட்ட பேட்டி என்பதால், முழுக்க முழுக்க எர்ணாகுளமும், நசுக்கப்படும் தலித் கிராமங்களும், நவீன சிறைச்சாலைகளாக பின்னப்பட்டுக்கொண்டிருக்கும் காலனிகளையும் சுற்றியேயிருந்தது.
ஒரு படைப்பாளியாகவும் காலனியாதிக்கத்தால் நசுக்கப்பட்ட நிலத்திலிருந்து வந்தவரென்ற முறையிலும் அவரின் பதில்கள் பொறுப்போடும், ஒரு உள்ளூரவிரவியிருக்கும் வலியோடுமே வந்திருந்தது. எர்ணாகுளத்தின் மீது, அந்த மக்களை பற்றியும் அதிகம் யோசிப்பவராகயிருக்கிறார். அவர்களை வெகுஜன திரைக்கு போட்டுக்காட்ட பிராயாசப்படுகிறார். முயல்கிறார். வெற்றிப்பெறுகிறார். சமீபத்தில் எர்ணாகுளத்தின் நிலங்களை பற்றிய படங்களை நிறையவே வருகிறது. இவருடைய சகாக்களுடன் அதை செய்கிறார். அங்கமாலி, கும்பளங்கி, ஈ.ம.யௌ என்று சொல்லலாம். இதற்கு பின் இந்த பதிவை எப்படி நகர்த்துவதென்று தெரியவில்லை. சொந்த மனபிரச்சனை. திடீரென்று பத்தியின் வளர்ச்சி நின்றுவிட்டது. இன்னொரு நாள் இன்னும் ராஜீவை பற்றியும், எர்ணாகுளத்தின் கிராமங்கள் பற்றியும் , கம்மட்டிப்பாடம் எழுத்தாளர் பாலசந்தரின் பேட்டியை பற்றியும் எழுத முயல்கிறேன்.
படத்திற்கு வருவோம். துறைமுகம். 1950களில் கொச்சி துறைமுகங்களிலிருந்த 'சாப்ப' என்ற வேலைக்கு ஆளெடுக்கும் முறையை பற்றிய கதையாம். கப்பலில் சரக்கை ஏற்றியிறக்கும் தொழிலாளிகளுக்கு முன், கங்கானிகள் உலோக டோக்கன்களை தூக்கியெறிவார்கள். அவற்றை சண்டையிட்டு, எடுப்பவர்களுக்கே அன்றைக்கு வேலை. இதை எதிர்த்து பெரும் போராட்டங்களும், உயிரிழப்புகளும் நிகழ்ந்திருக்கிறது. அதை பற்றிய கதைதானாம். மலையாள தளத்தில் படித்தேன். இதான் விஷயம்.

No comments:
Post a Comment