பெரியார் அரசியல் செயற்பாட்டாளர் மட்டுமல்ல. ஏகதேசத்துக்கான சிந்தனையாளர். மொழி, தேசியம் எல்லாம் கற்பனை. அதன்மீதுள்ள பற்றுகளெல்லாம் போலியும் வியாபார நோக்கமுமே என்றார். காதலை அதன் புனித நிலையிலிருந்து புறந்தள்ளி, உடற்கூற்சார் விஷயமாக அதை அணுகினார். தியாகம், பொதுநலம், ஒழுக்கம் எல்லாம் அலங்கார சொற்களென்று போட்டுடைத்தார். சுயநலம் ஒன்று தவறானவொன்றில்லை என்றார். தன்னை எல்லாவித நிறுவன அமைப்புகளுக்கெதிரானவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டார். ஆனால் சில பெரியாரியவாதிகள் அவரை வெறும் எதிர்ப்பரசியல் கையேடாக மாற்றிவைத்திருக்கிறார்கள். பார்ப்பனீய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி/மத அமைப்பு எதிர்ப்பு என்று தன் வசதிக்கேற்று மாற்றி வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லபோனால் பார்ப்பணர் எதிர்ப்பு. (நிற்க - பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தாரேயன்றி, எந்த பார்ப்பணர் தலையையும் போய் உடைக்கவோ இல்லை ரோட்டில் திரியும் பிராமணர்களை அடித்து பூநூலை அறுக்கவோயில்லை.)
பெரியாரின் இந்த டெஸ்டினேஷனுக்கு பின் ராமசாமியின் சமூதாயத்துடனான ஒரு நீண்ட பயணமிருந்தது. அது பல்வேறு பரிசோதனைகளையும், சில வெற்றிகளையும் சில தோல்விகளையும் கொண்டது. ராமசாமி முதலில் காங்கிரஸையும், காந்தியையும் தலையில் தூக்கிக்கொண்டு சுமந்தார். பின் அதற்கு எதிராக பிரச்சாரங்களை செய்தார். கல்யாண சடங்குகளை எதிர்த்த அவரே பின் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார். இத்யாதி இத்யாதி.. பல தவறுகள் செய்தார். ஏமார்ந்தார் .. மேற்சொன்னவற்றின் படிப்பினையே அவரை வேலைத்திட்டத்தை நோக்கி நகர்த்தியது. அதன் முடிவுகளே அவரின் பாதைக்கு ஒரு பொது பெயரை வைத்தது.
பெரியார் ஒரு வகையில் இச்சமூகத்தில் நிகழ்ந்த ஒரு Motion. இயங்குதலால் நிகழ்ந்த ஒரு சமுதாய படிப்பினை அல்லது விளைவு. பெரியார் மட்டுமல்ல இங்கு எல்லாமே இயக்கம் தான். எங்கும் எதுவும் முடிவடைவதில்லை. சமூக இயக்கத்தின் தேவையால் ராமசாமி அந்த Motionல் பெரியாராக்கப்பட்டார். அல்லது சமூக இயக்கம் பெரியாருக்கு ராமசாமியை எடுத்துக்கொண்டது. கடலைமிட்டாய் வியாபாரம் செய்துக்கொண்டிருந்த ராமசாமி பிறவாது போயிருந்தால், அங்கு வேறொருவர் பெரியாராக்கப்பட்டிருப்பார். ஆக அங்கு தனி மனிதரென்ற கதாப்பாத்திரம் இல்லை. அதே போல் தான் நீங்கள் காந்தியை எதிர்க்கலாம். ஆனால் காந்தி என்ற சமூகம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு Motionனை வாசிக்காமல்/அறிந்துக்கொள்ளாமல் சமூகத்தின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ளமுடியாது.
சரி கதைக்கு வருவோம். இங்கு ராமசாமியை ராமசாமி என்றழைக்க எனக்கு முழுவுரிமையுண்டு. அவர் கடலைமிட்டாய் விற்றுக்கொண்டிருந்தார் என்று சொல்லவும் எனக்கு உரிமையுண்டு. காரணம் ராமசாமி ஒரு மனிதன். அவ்வளவுதான். பெரியார் என் சிந்தனையை சுதந்திரப்படுத்திய ஒரு சமூக வரலாற்றின் விளைவுகளில் ஒன்று. அந்த விளைவின் மீது எனக்கு எவ்வித வழிப்பாட்டு கடமைகளும் இல்லை. புனிதப்படுத்தலுக்கான கடமையும் இல்லை. நன்றியுணர்வும் இல்லை. நாளையே எனக்கு பெரியார் உவர்ப்பாகயிருந்தால் அல்லது சமூகத்துக்கு பிற்போக்காக அல்லது ஒவ்வாத ஒன்றாக மாறிபோனால் அதை என்னளவிளிருந்து தூக்கி எறியவும் சமூகத்திலிந்து வெளியேற்றவும் நான் தீவிரமாக முயல்வேன்.

No comments:
Post a Comment