Monday, December 30, 2019

அய்யப்பனம்மே நெய்யப்பம் சுட்டு திரைப்படம் - தென்னைநாரில் தத்ததளிக்கும் ஒரு தென்னகத்து வாழ்வியல்


 அய்யப்பனம்மே நெய்யப்பம் சுட்டு /2019 / குட்டநாட்டு குஞ்ஞுமோன் / 102 mins / malayalam

கேரளத்தில் தென்னை நார் (coir) தயாரிப்பென்பது, விவசாயத்திற்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய தொழில். 80 சதவீதத்திற்கும் மேலான பெண்களை தொழிலாளர்களாக கொண்டது. கடந்து சில நூற்றாண்டுகளாகவே அங்கே தென்னை நார் தயாரிப்பு பெரிய அளவிலிருந்தாலும், 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தை சேர்ந்த James Darraghகின் முயற்சியில் முதல் ஒருங்கிணைந்த தொழிற்சாலை உருவாகிறது. அக்காலக்கட்டத்தில் குட்டநாட்டு பகுதியை சேர்ந்த புளிங்குன்னுவில் (ஆலப்புழாவில் ஒரு குக்கிராமம்) அய்யப்பன் என்ற தென்னை நார் தொழிலாளியின் மகனும், சாதிய ஒடுக்குமுறை தலைத்தோங்கி இருக்கும் குட்டநாடு பகுதியும், அய்யப்பனின் அம்மை ஓணத்திற்கு சுட்ட அப்பமும் தான் இந்த படத்திற்கான ஆதார விழுமியங்கள். 

படத்தின் முதல் ஷாட்டில் தண்ணீர் நிரம்பிய புழாகள்(ஆறுகள்) அவ்வூரை குறுக்கும் நெடுக்குமாக பிரித்து ஓடுவதாக காட்டி, சாதி என்ற புழாக்கள் அப்பகுதி மக்களை எவ்வாறு பிரித்தாழ்கிறதென்பதை எளிய காட்சிமொழியாக காட்டியிருப்பார் இயக்குனர் குட்டநாட்டு குஞ்ஞுமோன். அய்யப்பன் ஓணத்திற்கு நெய்யப்பம் சுடவேண்டும் என்று தன் அம்மையிடம் நச்சரிக்கிறான். ஏழ்மையில் சுழலும் அக்குடும்பத்திற்கும் அது பெரும் காரியமாகப்படுகிறது. ஆக இங்கே அப்பம் என்பது வெறும் அப்பமாக குஞ்ஞுமோன் காட்டவில்லை, ஏழைகளின் ஆற்றாமையையும் அவர்கள் பொது சமூகத்திலிந்து எவ்வாறு தூக்கியெறியப்படுகிறார்கள் என்ற அபத்தத்தையும் அப்பம் மூலம் குறியீடாக சுட்டுக் காட்டுகிறார். 

மேலும் அய்யப்பன் அம்மை நெய்யப்பம் சுட மேற்கொள்ளும் முயற்சிகளில்  குறுக்குவெட்டாக அவர் ஒப்புநோக்குவது மனித சமூகத்தின் உடலரசியலை தான். ஆம். ஆணாதிக்க சமூகம் உடல்கள் மீது செலுத்துகிற, அடக்குமுறையின் படிமத்தை, எவ்வித இடைச்சொருகளும் இல்லாமல், எவ்வித கலாச்சார ஒப்பனைகளுக்கும் இடங்கொடாமல் நம் நெற்றிபோட்டில் வைத்து இறக்கியிருக்கிறார் இயக்குனர். 

கடைசியாக ஓணத்தன்று நெய்யப்பம் சுட்டப்படுகிறது. அய்யப்பன், ஒரு பச்சை நிறத் துணியில் ஒரு அப்பத்தை சுற்றிக்கொண்டு, தன் பணக்கார நண்பன் குட்டப்பனிடம் கொடுக்கிறான். 'இதெந்தாடா புள்ளே.. நீயும் நிண்ட ஈ அப்பமும்..' என்று பச்சை துணியிலிருந்த அப்பத்தை தன் சிவப்பு ஷூவால் மிதித்து நசுக்குகிறான். 

அப்போது ஒரு காகம் அதை கொத்திக்கொண்டு பறக்கிறது. அதை துரத்திய வாரே அய்யப்பன் பின் தொடருகிறான். சமூக தனிமை அவனின் அத்தனை ஆசைகளையும் தூக்கிக்கொண்டு பறப்பதாகவே எனக்கு அக்காட்சி பட்டது. பின் பம்பை அற்றிலிட்டு பறந்து விடுகிறது. அவன் மவுனமாக அற்றையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது நம்பிக்கை என்ற தென்னை நாற் பையில், அவனின் ஆசைகளென்ற அப்பம் மிதந்து வந்து கரை சேர்கிறது. 

ஓணத்தன்று ஆலப்புழாவிலிருக்கும் குஞ்ஞுமோனேட்டன் வீட்டிற்கு சென்ற போது குஞ்ஞுமோனம்மே சுட்ட நெய்யப்பத்தை சாப்பிட்ட படியே படம் பார்த்தேன். படம் யூடியூபில் மாலை வெளியாகிறது. வெளியான பின், இப்பதிவின் பின்னோட்டத்தில் தருகிறேன். 

இறுதியாக சொல்வதானால், இது போன்ற  நெய்யப்பங்கள் தமிழில் சுட இன்னும் பல நூறு ஓணங்கள் ஆகும்.

படம் : அய்யப்பனம்மே கயிறு திரிக்கும் காட்சி

No comments:

Post a Comment

தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

  கொஞ்சம்   யோசித்துப்   பாருங்கள் .. 2014,  டிசம்பர்  3,  இரவு   சுமார்   எட்டு   மணி   இருக்கும் “ மூக்கின்   மேலே மூக்குத்தி   போலே மச்சம...