Wednesday, May 13, 2020

பத்மராஜன் திரைக்கதைகள்


 

ஆசான் பத்மராஜனின் பெரும்பாலான படங்களின் சாரம் உடல்கள் என்ற 'பாலியல் கருவி' மூலம் செலுத்தப்படும் அதிகாரமும், அது எவ்வாறு இரு பாலினங்களுக்கும் இடையில் செயல்படுகிறது என்பதும் தான். இன்னும் சொல்வதானால், ஆண் உடல் எவ்வாறு தன் பாலினத்தை காரணம் காட்டி, பெண்ணுடல் மீதும், அவளின் அக உணர்ச்சிகள் மீதும், தன் அதிகாரத்தை செலுத்துகிறது, பின் எந்தெந்த ஒழுக்க விழுமியங்களை காரணம் காட்டி, தன் அதிகாரத்திற்கு நியாயத்தை கற்பிக்க முயல்கிறதென்பதை பேசுகிறது. இதில் பல ஆண் உடல்கள் கோமாளிகளாகவும், தோல்வியுற்று அழும் கோழைகளாகவும் முடிந்து போவதை காணலாம்.

இயக்குனர் பரதனுடனான இவரது திரைக்கதைகள் மேற்சொன்ன கதைபொருள்களில் முக்கியமானவை. இந்த கூட்டணி படங்களுக்கு மதுரையில் பெருங்கூட்டம் வந்து முட்டுமாம். அவர்களுக்கு 'வேறு' காரணம் இருந்ததாக எஸ்.ரா ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார்.

இவரின் 'ஓரிடதொரு பயில்வான்' எனக்கு மிக முக்கியமான படம். தொடருக்காக காத்திருக்கிறேன்.. வாழ்த்துக்கள் Mani Mkmani

Tuesday, March 31, 2020

லாலேட்டன்


 காற்றத்தே கிளிக் கூடு என்று ஒரு படம். பரதன் இயக்கியது. லால் அந்தப் படத்தின் ஹீரோ அல்ல. படத்தில் கோபியின் மனைவி ஸ்ரீவித்யா. அவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருக்கிற லால் மெதுவாய் நீங்கள் எனது அம்மாவைப் போலிருக்கிறீர்கள் என்று சொல்ல வேண்டும். இறந்து போன எனது அம்மாவின் குரல் கூட உங்களுடைய குரலை போல தானிருக்கும் என்பது போன்ற வசனங்கள். பரதனுக்கு அந்தக் காட்சி கிளிஷேவாகி விடக் கூடாது என்கிற தெளிவிருந்திருக்கலாம். ஆனால் லால் அதை நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்கிற சவால் இருக்கிறது அல்லவா?  அப்போது லாலுக்கு இருபத்தி மூன்று வயது. வாழ்வைப் பற்றி என்ன பெரிதாக தெரிந்திருக்கும் என்று தெரியவில்லை. ஒரு சிறிதும் நடிப்பை கொண்டு வந்து விடாமல், அசலான அந்த வயதுப் பையனாகவே அந்த கனமான பத்தியை சொல்லி முடிக்கும் போது பலரும் அடேங்கப்பா என்று நினைத்திருப்பார்கள். நானும் நினைத்தேன். அவர் மீது பலரைப் போலவே எனக்கும் ஒரு பார்வை விழுந்தது. இதில் உள்ள விசேஷம் என்னவென்றால் அவரது வயதைப் போலவே அவரும் வளர்ந்து கொண்டேயிருந்தார்.  


வானபிரஸ்தம் படத்தில் ஒரு காட்சி உண்டு. ஒரு சிறிய வீட்டின் முற்றம். அங்கே கிடக்கிற ஒரு கயிற்றுக் கட்டிலில் இருந்து தூக்கம் விழித்து எழுந்து அமருகிற ஒரு குடிகாரனான கதகளிக்காரன் முகத்தை கொண்டு வருவார் பாருங்கள், முன்பு சொன்ன படத்துக்கும் இந்த படத்துக்கும் நடுவில் லாலின் எல்லா சாதனைகளும் இருக்கின்றன.

லாலுக்கு இன்று பிறந்த தினம். அவர் அந்த நிலத்தின் சூப்பர் ஸ்டார். ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. அவரைப் போற்றிக் கொண்டாடுகிறார்கள் என்பதை முதலில் சொல்லி விட்டு அவர் மீது தர்மசங்கடமான கேள்விகளையும் எறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் சொல்ல வேண்டும். கேரளம் இன்று புதிய முகம் தரித்திருக்கிறது. புதிய சினிமாக்கள் உதயமாகிக் கொண்டிருக்கின்றன. புதிய தலைமுறையின் திரைக்கதைகளில் அவர் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறாரா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவருடைய நடிப்பின் வெளி மிகப் பரந்தது. அவரால் எந்த முகத்துக்குள்ளேயும் புகுந்து நின்று நிலைக்க முடியும். பழைய வார்த்தை, சோபிக்க முடியும். ஒரு பெரிய கலை வாழ்க்கை வாழ்ந்து விட்ட அந்தக் கலைஞனுக்கு மனம் நிறைந்த நெகிழ்வான வாழ்த்துக்களை மானசீகமாக சொல்லிக் கொள்கிறேன். நம் எல்லோருடைய சார்பிலும்.


சில படங்கள் இருக்கின்றன.


 

மக்களின் நினைவில் அவர் அந்த வழியே தான் தனது இருக்கைக்கு வந்தார்.


கொஞ்சம் பிக்கல் பிடுங்கல், கொஞ்சம்  இளமையும் உற்சாகமுமாய் ஒரு நகைச்சுவை தொனியில் அந்தப் படங்கள் இருந்தன. அதில் லால் அந்த மாதிரி ஒரு முகத்தை நிறுவி மக்களை குஷிப்படுத்தினார். இப்போது பார்த்தாலும் TP பாலகோபாலன் MA வும் வரவேல்பும் அற்புதமான படங்கள்.  அதில் லால் நல்ல திமிறல் கொண்ட பையனாக செய்கிற காரியங்கள் கொண்டாடப்பட்டன. அதைப் போன்ற படங்கள் தொடரவும் செய்தன. சன்மனசுள்ளவர்களுக்கு சமாதானம் போன்ற படங்களில் அட்டகாசம் செய்தார் என்றே சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட படங்களில் இருந்து மெதுவாக அவர் வேறு ஒரு கரையில் ஏறிக்கொண்டும் இருந்தார்.  ராஜாவின்ட மகன் என்கிற தாதா கேரக்டர். சுகமோ தேவி போன்ற ரொமான்ஸ் படம். தாளவட்டம் என்கிற தீவிரமான படம். பத்மமராஜனின் அதிரடியான நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள். இவைகள் எதிலும் சம்மந்தப்படாத எம் டி எழுதி ஹரிஹரன் இயக்கிய பஞ்சாக்னி.


 

நான் அவரது படங்களை வருடம் வாரியாக அடுக்கி வைக்கிற காரியத்தை செய்ய மாட்டேன். ஆனால் அவரை செதுக்கி வழி அனுப்பின, அவருக்கு அடிப்படையாய் இருந்து விட்ட மரபை சொல்லியாக வேண்டும். ஒரு நடிகனுக்குள் திறமை என்பதே அவன் வளர்த்துக் கொள்கிற கற்பனைகள் தான். மலையாளத்தில் நல்ல எழுத்தாளர்களும் நல்ல இயக்குனர்களும் இருந்து, அவர்களுடன் தொழிற்படவே அவர் பல்வேறு கோணங்களில் உலாவத் தெரிகிற திராணியை அடைந்தார் எனலாம். மேலும் மலையாள சினிமாக்களின் பொற்காலமாக குறிப்பிடப்பதுமான அந்த சந்தர்ப்பத்தில்  மம்முட்டி ஒரு போட்டியாய் அமைந்ததும் கூட லாலுக்கு கிடைத்த லாபம் என்றே சொல்ல வேண்டும்.


நமக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள். அதில் ஊரே தூங்கும் போது தனது லாரியில் வந்து இறங்கி வீட்டில் இருந்த அம்மாவைத் தட்டியெழுப்பி ஓன்று விட்ட உறவினனுடன் உணவுண்டு அடுத்த வீட்டுப் பெண்களைப் பற்றி விசாரிப்பது என்று தொடருகிற காட்சியில் பத்மராஜன் மிளிரவே செய்வார்.  ஆனால் உழைப்பில் திருப்தியடைந்த தன்னம்பிக்கையின் செருக்குடன் லால் அந்தப் படம் முழுக்க உலவுவதைப் பார்க்க வேண்டும். நிஜமாகவே வியப்பு. அது அத்தனை எளிதாய் சாத்தியமில்லாத நடைமுறை. அப்படித்தான் பரதனின் தாழ்வாரம் படமும் கூட. அதில் நான் மிகவும் விரும்பும் சலீம் கவுஸ், லாலின் பகுதி ஆளாக இருந்து, எதிரியாகவும் இருப்பார். உண்மையில் இருவருக்கும் நடுவே எழும்பும் பகைமை அதி உக்கிரம் கொண்டது. பொங்கி எரிய வேண்டிய நெருப்பை பலமாக பொதிந்து மறைப்பது போன்ற ஒரு திரைக்கதை. சலீம் தனது செயற்பாடுகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வெளி இருக்கும். ஆயின் லால் அமைதியாகவே இருக்க வேண்டும் என்பது சூழல். அந்த மகத்தான நடிகன் சலீமுக்கு முன்னால், குமுறலில் இருக்கிற லாலை மக்கள் அறிந்தார்கள் என்பதை மட்டுமே சொன்னால் போதும். அவர் மல சிக்கலின் முக சுருக்கத்தைக் காட்டாமலே ஜனங்களைக் கொதிப்பூட்டினார். சலீமைக் கொன்று முடித்து லால் செல்லுகிற அந்த பிரேமில் நமக்குள் நிறைகிற அந்த திருப்தியை வர்ணிக்க முடியாது.

சதயம் என்கிற மிக தீவிரமான படம் ஓன்று உண்டு. எம் டி தான் எழுதினார் இதற்கும். எப்படி தனியாவர்த்தனம் என்கிற படம் மறுபடி ஒருமுறை பார்க்க முடியாதோ, இந்தப் படமும் அப்படித்தான். தூக்கு தண்டனைக் கைதியாக லால். தூக்கை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிற ஆர்டர் அவரிடம் கொடுக்கப்பட்டதும் லால் என்ன செய்தார் என்பதை புரிந்து கொள்ள முடியாமல் எம் டி திகைத்ததை பல இடங்களில் சொல்லி இருக்கிறார். இதைப் பற்றி சுகா எப்போதும் சிலாகித்ததுண்டு. அவர் என்ன செய்கிறார் என்பதை இப்போதும் என்னால் கூற முடியவில்லை. கண்களில் நீர் நிரம்ப ஒவ்வொரு முறையும் உறைந்திருக்கிறேன். இனிமேயும் யாராவது பார்க்கலாம், அவர் என்ன செய்கிறார் என்பதை அறிய முடிந்தால் அதைப் பற்றி எழுதலாம்


வந்த புதிதில் ஒரு வரிசையில் லாலின் முகம் வளைய வந்திருந்தது போல வேறு ஒரு வரிசை துவங்கிற்று. அது மலையாளத்துக்கு கிட்டின பொக்கிஷமான லோகிதா தாசும் சிபி மலையில் மற்றும் வேறு பல இயக்குனர்களும் இயங்கினவை. அடேங்கப்பா. வரிசையாய் வந்தவாறு இருந்த அந்த படங்களுக்கு மக்கள் வழி மேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். கிரீடம், தசரதம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, தனம், பரதம், செங்கோல் என்று படங்கள். இவைகளில் எல்லாமே வாழ்க்கை இயங்கியது.  கொப்பளிக்கிற உணர்ச்சிகளைக் கையாண்டார்கள். மனிதனின் அடிப்படை உணர்ச்சிகளில் வாழ்வு நடத்துகிற போரில் அவர்கள் மனிதர்களாக தன்னை நிதானிப்பதை பல கோணங்களில் சொல்லப்பட்டதற்கு லால் போன்ற நடிகர்கள் இருந்தது ஒரு காரணம்.


பிரியதர்சனின் படங்கள் கூட பேசப்பட்டவை தாம்.

முழுமை கொள்ள முடியாத அவரது படங்களில் லால் இருக்கவே ஆயிற்று என்று தான் சொல்ல வேண்டும். லால் இல்லையெனில் பிரியதர்சன் என்னதான் செய்திருப்பாரோ என்று எனக்கு மலைப்பு வந்திருக்கிறது.


ஓன்று சொல்ல வேண்டும்.


புலி முருகன் அல்ல லால். மலையாளத்தின் வீழ்ச்சிப் படங்கள் தான் இண்டஸ்டரியின் சந்தை மதிப்பைக் கூட்டுகிறது என்கிற விநோதக் குழப்பத்தில் எந்த சூப்பர் ஸ்டார்களும் தப்பிக்க ஆகாது. அது மட்டும் அல்ல, அதில் பங்கு பெற வேண்டும் என்பது ஒரு விதமான ரூல். அவைகளில் பங்கு பெறுவதால் லால் லாலாகி இல்லாமற் போவதில்லை. தனது மகனைப் பார்க்க அலைபாய்கிற குஞ்சிக்குட்டன் என்கிற கதகளிக்காரன் தனது தலைக்கு மேலே பந்து உருளும் சப்தம் கேட்டு கலங்குகிற காட்சி ஓன்று நினைவில் இருந்து விட்டால் போதும், நூறு புலி முருகன்களை சகித்துக் கொள்ளலாம். ஏனெனில் ஒரு முறை திருடி விட்டவனை அவன் ஜென்மம் தீர்கிற வரைக்கும் திருடன் என்று சொல்லி பழகிக் களிக்கிற சமூகம் ஒரு முறையாவது கலைஞைனாய் இருந்து விட்டவனை, கலைஞனாகவே   உட்கொள்ள முடியாதா. 

கலை படங்களில் மட்டுமே தாத்பர்யம் வைத்திருந்த அரவிந்தனின் படத்தில் லால் நடித்திருக்கிறார்.

அதில் இருந்த, அவர் கை கொள்ள வேண்டிய கச்சிதம் அவருக்கு தெரியும்.


அதற்கு நேர் மாறான படங்களில், உதாரணமாக தேவாசுரம் போன்ற படங்களில் கொதித்து எழும்பினார்.


செங்கோல் என்கிற படத்தைப் பலரும் பார்த்திருக்கக் கூடும். வாழ்வின் கொடுங்கைகள் ஒரு மனிதனின் கழுத்தை நெறிப்பதை ஒரு விதமான அப்பட்டமான காட்சிகளுடன் தாக்கிய படம்.  கிரீடம் படத்தின் இரண்டாம் பகுதி.  ஜெயிலில் இருந்து வெளிவந்து மீன் விற்று ஒதுங்கி வாழ்கிறவனை வம்புக்கு இழுத்து ஒரு சந்தியில் நிறுத்துகிறார்கள். படத்தில் லால் அப்போது ஒரு முடிவெடுத்து தனது நண்பனிடம் பேசுகிற காட்சி ஒன்றிருக்கிறது. சமூகம் தனக்கு ஒரு கிரீடத்தை வைத்து அதில் ஒரு இறகையும் வைத்து விட்டது பற்றி சொல்லுவார். எரிகிற முகமென்றால் என்னவென்று தெரியாதவர்கள் அதைப் பார்க்க வேண்டும். அதே படத்தில் வேறு ஒரு காட்சியிருக்கிறது. ஆளுமையுடன் இருந்த ஒரு மனிதர் தனது மகளை ஒரு அறைக்குள் விபச்சாரம் செய்ய அனுப்பி வைத்து விட்டு, மற்றொரு அறையில் காத்திருக்கிறார். அப்பனாக திலகன். அவரது மகனாக லால். அப்பன் செய்த காரியத்தை மகன் பார்க்க நேர்ந்ததும் அவர் கதவை அடைத்துக் கொண்டு தூக்கில் தொங்கி விடுகிறார். வெறுத்து வெறுத்து வெறுத்துத் தீர்ந்த பின்னர் தனது அப்பனை சூறையாடியது என்னவென்று ஒரு கட்டத்தில் ஞானம் போல அறிகிறான் மகன். அந்த மகனாக லால் ஒரு கட்டத்தில் காட்சி ஒன்றிருக்கிறது, மேலும் வளர்த்திக் கொண்டு செல்ல விரும்பவில்லை, வார்த்தைகளை வீணாக்காமல் நான் மோகன் லாலை மகா நடிகன் என்றே அனுபவம் கொள்கிறேன்.


காலம் இன்னும் இருக்கிறது.


நூறாண்டுகள் அவர் வாழ வேண்டும்.


இந்திய சினிமா தனது பழைய பிறவியை வீசி எறிந்து முடித்து இப்போது தான் கண் விழித்த மழலையாய் முழித்துக் கொண்டிருக்கிறது.

அது கை கால் வைத்து வளரும்.

இந்த முட்டாள்தனத்தின், கட்டுபெட்டிகளின் அபத்த காலம் விரைவிலேயே ஒழிந்து, புதிய பாதையைத் தொட்டுவிடும் என்றால் லால் நடிப்பதற்கான புதிய வெளிகளே இனிமேல் தான் துவங்கப் போகிறதென்று நம்புகிறேன். இந்தக் கட்டுரையிலேயே கூட நான் எங்கேனும் உணர்ச்சி வசப்பட்டிருந்தால் அது லால் உண்டாக்குகிற மேஜிக் தான் என்பதை சொல்லி விட வேண்டும். 

மணி எம் கே மணியின் முகநூல் பதிவு

Friday, January 31, 2020

திலீஷ் போத்தனும் ரியலிஸமும்


 திலீஷ் போத்தன்

‌இலக்கியத்திலும் சினிமாவிலும் நாம் எதார்த்த முறையிலேயே கதைகள் சொல்கிறோம். ஜேம்ஸ் கேமரூனின் அவதாரிலும் சரி, ரெனவண்ட்டிலும் சரி. ரியலிஸத்தை கடந்து பேன்டசிக்கு போய் விட்டார்கள். நமக்கு ரியலிஸ்ட்டிக் சினிமா மட்டும் தான். இதை ஒரு சுமை என்று சொல்லலாமா? உங்கள் சினிமாக்கள் ரியலிஸ்ட்டிக்காக தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அல்லது ரியலிஸம் தேவைப்படும் போது ரியலிஸ்ட்டிக்காகவும், பேன்டசி தேவைப்படும் போது பேன்டசியாகவும், சினிமாக்கள் எடுக்க நினைக்கிறீர்களா?

‌சொல்ல நினைப்பதை எப்படி மிக தெளிவாகவும் எபக்டீவ்வாகவும் பார்வையாளர்களுக்கு கடத்தலாம். இதை பற்றி மட்டும் தான் நான் யோசிப்பேன். அது பேன்டசியில் சொல்ல வேண்டி வந்தால் பேன்டசியில். ரியலிஸ்ட்டிக்காக சொல்ல வேண்டிவந்தால், ரியலிஸ்ட்டிக்காக. என் முதல் இரண்டு சினிமாக்களின் கதைகளும் ரியலிஸ்ட்டிக்கான
‌ கதைகள். அதனால் அது ரியலிஸ்ட்டிக்காக வந்தது. அதே வேளை, இதனால் (திலீஷ் மீது வைக்கப்பட்டிருக்கும் ரியலிஸ இயக்குனர் என்ற பெயர்) எனக்கு கூடுதல் சுமை  வந்திருக்கிறது. ஒரு இயக்குனர் என்ற முறையில், அதை உடைக்க விரும்புகிறேன். அதற்காக அடுத்து ஒரு பேன்டசி உதவியுள்ள, அல்லது ரியலிஸத்திற்கு அப்பாலுள்ள ஒரு தளத்தில் ஒன்றை நான் முயற்சிக்க வேண்டும். ரியலிஸ சினிமாக்கள் மட்டுமே நல்ல சினிமாக்கள் என்ற தவறான கருத்து மலையாளத்தில் வந்திருக்கிறது. அத உடைப்பதற்காகவேனும் ஒரு சினிமா எடுக்க வேண்டும். தோல்வியுற்றால், 'இப்போது தோல்வியடைந்திருக்கலாம். ஆனால் இன்னும் காலம் இருக்கிறது' என்று சொல்லலாம். என்ன ஆனாலும் அப்படியான ஒரு முயற்சிக்கு நான் தயார் தான்.

மலையாள மூலம் The Cue தளம்.

Monday, December 30, 2019

அய்யப்பனம்மே நெய்யப்பம் சுட்டு திரைப்படம் - தென்னைநாரில் தத்ததளிக்கும் ஒரு தென்னகத்து வாழ்வியல்


 அய்யப்பனம்மே நெய்யப்பம் சுட்டு /2019 / குட்டநாட்டு குஞ்ஞுமோன் / 102 mins / malayalam

கேரளத்தில் தென்னை நார் (coir) தயாரிப்பென்பது, விவசாயத்திற்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய தொழில். 80 சதவீதத்திற்கும் மேலான பெண்களை தொழிலாளர்களாக கொண்டது. கடந்து சில நூற்றாண்டுகளாகவே அங்கே தென்னை நார் தயாரிப்பு பெரிய அளவிலிருந்தாலும், 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் அயர்லாந்தை சேர்ந்த James Darraghகின் முயற்சியில் முதல் ஒருங்கிணைந்த தொழிற்சாலை உருவாகிறது. அக்காலக்கட்டத்தில் குட்டநாட்டு பகுதியை சேர்ந்த புளிங்குன்னுவில் (ஆலப்புழாவில் ஒரு குக்கிராமம்) அய்யப்பன் என்ற தென்னை நார் தொழிலாளியின் மகனும், சாதிய ஒடுக்குமுறை தலைத்தோங்கி இருக்கும் குட்டநாடு பகுதியும், அய்யப்பனின் அம்மை ஓணத்திற்கு சுட்ட அப்பமும் தான் இந்த படத்திற்கான ஆதார விழுமியங்கள். 

படத்தின் முதல் ஷாட்டில் தண்ணீர் நிரம்பிய புழாகள்(ஆறுகள்) அவ்வூரை குறுக்கும் நெடுக்குமாக பிரித்து ஓடுவதாக காட்டி, சாதி என்ற புழாக்கள் அப்பகுதி மக்களை எவ்வாறு பிரித்தாழ்கிறதென்பதை எளிய காட்சிமொழியாக காட்டியிருப்பார் இயக்குனர் குட்டநாட்டு குஞ்ஞுமோன். அய்யப்பன் ஓணத்திற்கு நெய்யப்பம் சுடவேண்டும் என்று தன் அம்மையிடம் நச்சரிக்கிறான். ஏழ்மையில் சுழலும் அக்குடும்பத்திற்கும் அது பெரும் காரியமாகப்படுகிறது. ஆக இங்கே அப்பம் என்பது வெறும் அப்பமாக குஞ்ஞுமோன் காட்டவில்லை, ஏழைகளின் ஆற்றாமையையும் அவர்கள் பொது சமூகத்திலிந்து எவ்வாறு தூக்கியெறியப்படுகிறார்கள் என்ற அபத்தத்தையும் அப்பம் மூலம் குறியீடாக சுட்டுக் காட்டுகிறார். 

மேலும் அய்யப்பன் அம்மை நெய்யப்பம் சுட மேற்கொள்ளும் முயற்சிகளில்  குறுக்குவெட்டாக அவர் ஒப்புநோக்குவது மனித சமூகத்தின் உடலரசியலை தான். ஆம். ஆணாதிக்க சமூகம் உடல்கள் மீது செலுத்துகிற, அடக்குமுறையின் படிமத்தை, எவ்வித இடைச்சொருகளும் இல்லாமல், எவ்வித கலாச்சார ஒப்பனைகளுக்கும் இடங்கொடாமல் நம் நெற்றிபோட்டில் வைத்து இறக்கியிருக்கிறார் இயக்குனர். 

கடைசியாக ஓணத்தன்று நெய்யப்பம் சுட்டப்படுகிறது. அய்யப்பன், ஒரு பச்சை நிறத் துணியில் ஒரு அப்பத்தை சுற்றிக்கொண்டு, தன் பணக்கார நண்பன் குட்டப்பனிடம் கொடுக்கிறான். 'இதெந்தாடா புள்ளே.. நீயும் நிண்ட ஈ அப்பமும்..' என்று பச்சை துணியிலிருந்த அப்பத்தை தன் சிவப்பு ஷூவால் மிதித்து நசுக்குகிறான். 

அப்போது ஒரு காகம் அதை கொத்திக்கொண்டு பறக்கிறது. அதை துரத்திய வாரே அய்யப்பன் பின் தொடருகிறான். சமூக தனிமை அவனின் அத்தனை ஆசைகளையும் தூக்கிக்கொண்டு பறப்பதாகவே எனக்கு அக்காட்சி பட்டது. பின் பம்பை அற்றிலிட்டு பறந்து விடுகிறது. அவன் மவுனமாக அற்றையே பார்த்துக்கொண்டிருக்கிறான். அப்போது நம்பிக்கை என்ற தென்னை நாற் பையில், அவனின் ஆசைகளென்ற அப்பம் மிதந்து வந்து கரை சேர்கிறது. 

ஓணத்தன்று ஆலப்புழாவிலிருக்கும் குஞ்ஞுமோனேட்டன் வீட்டிற்கு சென்ற போது குஞ்ஞுமோனம்மே சுட்ட நெய்யப்பத்தை சாப்பிட்ட படியே படம் பார்த்தேன். படம் யூடியூபில் மாலை வெளியாகிறது. வெளியான பின், இப்பதிவின் பின்னோட்டத்தில் தருகிறேன். 

இறுதியாக சொல்வதானால், இது போன்ற  நெய்யப்பங்கள் தமிழில் சுட இன்னும் பல நூறு ஓணங்கள் ஆகும்.

படம் : அய்யப்பனம்மே கயிறு திரிக்கும் காட்சி

Tuesday, December 3, 2019

ஓநாய் குலச்சின்னம் - சில கேள்விகள்


 ஓநாய் குலச்சின்னம். 


மேய்ச்சல் நிலத்துக்காரர்கள் அவர்களின் மூதாதைய இனமான ஓநாய்களிடமிருந்து, தங்கள் இனத்தின் வாழ்நாள் முழுமைக்கும் தேவையான ஊந்து விசையையும், தன் சந்ததிகளுக்கு சேமித்துவைக்க ஞான அறநெறியையும் பயின்றிருக்கிறார்கள். இந்த பாடமானது வானிலை, நிலத்தோற்றம் மற்றும் அதன் குணங்கள், சக உயிரினங்கள் மற்றும் அவை இருத்தலுக்கான நியாங்கள், தங்களுடைய மற்றும் தங்களுடைய எதிரிகளின் பலங்கள், பல்வேறு வகையான தாக்குதல்கள், யுத்த வழிமுறைகள், அந்த யுத்தங்கள் கோரும் பொறுமைகள், இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு மனிதன் அல்லது ஒரு இனம், தன் எதிரிகளிடம் அடிமைப்படுவதிலிருந்து தப்பித்துக்கொள்ள, தான் சரணடைவதற்கு முன்பாக மரணத்தை தேர்வு செய்யும் ஆன்ம பலம் போன்றவற்றை கொண்டது. 


மேலும் இந்நாவல் எனக்கு பல கேள்விகளை எழுப்புகிறது. இந்த பெருநிலமானது எந்த உயிரின அதிகாரத்திற்கு கட்டுப்படுகிறது? தன் சக அதிகார உயிரினங்களுடன் எப்பொழுதும் இறுக்கம் கொண்டே வளர்ந்து வரும் ஒரு உறவை, இந்த அதிகார உயிரினங்கள் எவ்வாறு அனுபவித்து தன்னை வளர்த்துக்கொள்கின்றன? தங்கள் கலாச்சாரங்களின் வளர்ச்சிகள் / தோல்விகள் என்பது, சக அதிகார மனித இனங்கள் அல்லது சக அதிகார உயிரினங்களுடனான முரணிலிருந்து தொடங்குகிறதா? அல்லது இப்பெருநிலமே தான் எல்லாவற்றுக்குமான ஏக அதிகாரம் படைத்த ஒரு உண்மையா?


சீன மொழி மூலம் : ஜியாங் ரோங்.

தமிழில் சி.மோகன் மொழிப்பெயர்க, இயக்குனர் வெற்றிமாறனின் 'அதிர்வு பதிப்பகம்' வெளியிட்டுள்ளது.


Monday, December 2, 2019

லோகிததாஸ்


 "நகரங்களின் உயர்ரக திரையரங்குகளில் ஜிப்பா போட்டுக்கொண்டு படம் பார்க்க வரும் தாடிக்காரர்கள் அல்ல எனது இலக்கு. என்னுடைய பார்வையாளன் மண்வெட்டியை கழுவி வீட்டில் வைத்துவிட்டு குளித்து ஒரு துவைத்த பழைய வேட்டியை கட்டிக்கொண்டு வந்து படம் பார்க்க அமரும் எளிய மனிதன். நான் போவது அவனை நோக்கித்தான்."

மிகவும் பழகிப்போன பழைய வசனம் இது. தமிழில் அடிதடி குத்துப்பாட்டுகளுடன் படம் எடுக்கும் திரைப்படக்காரர்களும் இதைத்தான் கூறுவார்கள். ஆனால் லோகி ஒருபோதும் சாமானியனின் சபலங்களை பயன்படுத்திக் கொண்டவரல்ல. சாமானியனின் சலிப்பையும் அக்கறையின்மையையும் நம்பி படம் எடுத்தவரல்ல. எளிய மக்களின் உள்ளே சுடர்விடும் நீதியுணர்வை நம்பி படம் எடுத்தவர் அவர். அவர்களுடைய சுயமரியாதையையும் மானுட உணர்வையும் தொட்டுப்பேச முடிந்தவர். அதனாலேயே அவர் அம்மக்களின் ப்ரியத்துக்குரியவராக இருந்தார். வாழ்நாள் முழுக்க லோகி "அமரத்தில்"தான் அமர்ந்திருந்தார்.

லோகி நினைவுகள் மதிப்பீடுகள்

Wednesday, September 4, 2019

முழுமையான பெரியார்


 பெரியார் அரசியல் செயற்பாட்டாளர் மட்டுமல்ல. ஏகதேசத்துக்கான சிந்தனையாளர். மொழி, தேசியம் எல்லாம் கற்பனை. அதன்மீதுள்ள பற்றுகளெல்லாம் போலியும் வியாபார நோக்கமுமே என்றார். காதலை அதன் புனித நிலையிலிருந்து புறந்தள்ளி, உடற்கூற்சார் விஷயமாக அதை அணுகினார். தியாகம், பொதுநலம், ஒழுக்கம் எல்லாம் அலங்கார சொற்களென்று போட்டுடைத்தார். சுயநலம் ஒன்று தவறானவொன்றில்லை என்றார். தன்னை எல்லாவித நிறுவன அமைப்புகளுக்கெதிரானவன் என்று பிரகடனப்படுத்திக்கொண்டார். ஆனால் சில பெரியாரியவாதிகள் அவரை வெறும் எதிர்ப்பரசியல் கையேடாக மாற்றிவைத்திருக்கிறார்கள். பார்ப்பனீய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, சாதி/மத அமைப்பு எதிர்ப்பு என்று தன் வசதிக்கேற்று மாற்றி வைத்திருக்கிறார்கள். இன்னும் சொல்லபோனால் பார்ப்பணர் எதிர்ப்பு. (நிற்க - பெரியார் பிள்ளையார் சிலையை உடைத்தாரேயன்றி, எந்த பார்ப்பணர் தலையையும் போய் உடைக்கவோ இல்லை ரோட்டில் திரியும் பிராமணர்களை அடித்து பூநூலை அறுக்கவோயில்லை.) 


பெரியாரின் இந்த டெஸ்டினேஷனுக்கு பின் ராமசாமியின் சமூதாயத்துடனான ஒரு நீண்ட பயணமிருந்தது. அது பல்வேறு பரிசோதனைகளையும், சில வெற்றிகளையும் சில தோல்விகளையும் கொண்டது. ராமசாமி முதலில் காங்கிரஸையும், காந்தியையும் தலையில் தூக்கிக்கொண்டு சுமந்தார். பின் அதற்கு எதிராக பிரச்சாரங்களை செய்தார். கல்யாண சடங்குகளை எதிர்த்த அவரே பின் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைத்தார். இத்யாதி இத்யாதி.. பல தவறுகள் செய்தார். ஏமார்ந்தார் .. மேற்சொன்னவற்றின் படிப்பினையே அவரை வேலைத்திட்டத்தை நோக்கி நகர்த்தியது. அதன் முடிவுகளே அவரின் பாதைக்கு ஒரு பொது பெயரை வைத்தது.


பெரியார் ஒரு வகையில் இச்சமூகத்தில் நிகழ்ந்த ஒரு Motion. இயங்குதலால் நிகழ்ந்த ஒரு சமுதாய படிப்பினை அல்லது விளைவு. பெரியார் மட்டுமல்ல இங்கு எல்லாமே இயக்கம் தான். எங்கும் எதுவும் முடிவடைவதில்லை. சமூக இயக்கத்தின் தேவையால் ராமசாமி அந்த Motionல் பெரியாராக்கப்பட்டார். அல்லது சமூக இயக்கம் பெரியாருக்கு ராமசாமியை எடுத்துக்கொண்டது. கடலைமிட்டாய் வியாபாரம் செய்துக்கொண்டிருந்த ராமசாமி பிறவாது போயிருந்தால், அங்கு வேறொருவர் பெரியாராக்கப்பட்டிருப்பார். ஆக அங்கு தனி மனிதரென்ற கதாப்பாத்திரம் இல்லை. அதே போல் தான் நீங்கள் காந்தியை எதிர்க்கலாம். ஆனால் காந்தி என்ற சமூகம் ஏற்படுத்திக்கொண்ட ஒரு Motionனை வாசிக்காமல்/அறிந்துக்கொள்ளாமல் சமூகத்தின் வரலாற்றை உள்வாங்கிக்கொள்ளமுடியாது.


சரி கதைக்கு வருவோம். இங்கு ராமசாமியை ராமசாமி என்றழைக்க எனக்கு முழுவுரிமையுண்டு. அவர் கடலைமிட்டாய் விற்றுக்கொண்டிருந்தார் என்று சொல்லவும் எனக்கு உரிமையுண்டு. காரணம் ராமசாமி ஒரு மனிதன். அவ்வளவுதான். பெரியார் என் சிந்தனையை சுதந்திரப்படுத்திய ஒரு சமூக வரலாற்றின் விளைவுகளில் ஒன்று. அந்த விளைவின் மீது எனக்கு எவ்வித வழிப்பாட்டு கடமைகளும் இல்லை. புனிதப்படுத்தலுக்கான கடமையும் இல்லை. நன்றியுணர்வும் இல்லை. நாளையே எனக்கு பெரியார் உவர்ப்பாகயிருந்தால் அல்லது சமூகத்துக்கு பிற்போக்காக அல்லது ஒவ்வாத ஒன்றாக மாறிபோனால் அதை என்னளவிளிருந்து தூக்கி எறியவும் சமூகத்திலிந்து வெளியேற்றவும் நான் தீவிரமாக முயல்வேன்.    


தேகத்தால் மறைந்தாலும் இசையாய் மலரும் எஸ்பிபி – பிறந்தநாள் புகழஞ்சலி

  கொஞ்சம்   யோசித்துப்   பாருங்கள் .. 2014,  டிசம்பர்  3,  இரவு   சுமார்   எட்டு   மணி   இருக்கும் “ மூக்கின்   மேலே மூக்குத்தி   போலே மச்சம...